த.தே.கூ கூட்டத்தில் அமளிதுமளி. சேனாதிராஜா கூக்குரல் இட்டவாறு வெளியேறினார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மிகவும் முக்கியமான கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றபோது, அதற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சமூகமளிக்கவில்லை. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக மாவை சேனாதிராஜாவுக்கும், வன்னிமாவட்ட எம்.பிக்களான என்.சிவசக்தி ஆனந்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, கூட்டத்தைக் குழப்பும் வகையில் உரத்துச் சத்தமிட்ட வண்ணம் மாவை சேனாதிராஜா கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இவருக்குப் பின்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மற்றும் சுமந்திரன் ஆகியோரும் வெளியேறிச் செல்ல ஏனையோர் தொடர்ந்து கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பின்னர், தோற்றம் பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. எனினும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருக்காகவே தமது வாக்குகளைச் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வவுனியா உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையும் தெரிவு செய்தார்கள்.
இருப்பினும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர்.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் உறுதியாகவும், தமக்கே உரிய திட்டங்களோடும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயம் ‐ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஆனால் கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலுவலகமே அண்மையில் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும், அது உரிய முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படவும் இல்லை, அழைக்கப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அலுவலகமே திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று ஆர்.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா தரப்பிற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை எதுவும் இடப்படவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர்ப்பலகையை இந்த அலுவலகத்திற்கு இட்டால், அலுவலகம் கல்லெறிக்கு உள்ளாகும் என்று எஸ்.சுமந்திரன் காரணம் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் நாளடைவில் அந்த அலுவலகத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற பெயர்ப்பலகை இடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட தினத்தன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் அங்கு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கென ஒரு யாப்பு இருப்பதாகவும், அதற்கமைவாகவே தாங்கள் செயற்படப் போவதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அப்படியென்றால், அவரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்துள்ள மக்களுக்கு என்ன சொல்லப்போகின்றார் என்பது தெரியவில்லை.
ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எஸ்.சுமந்திரன் ஆகியோரின் இப்போதைய செயற்பாடுகளின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பு இல்லை என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே உள்ளது என்றும் கூற முனைகின்றார்கள் என்பது உறுதியாகின்றது.
மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி என்பன அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பற்றி எந்தக் கதையும் கிடையாது.
இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வினவப்பட்டபோது, நாங்கள் எமது கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியை நாங்கள் வளர்க்கின்றோம். நீங்கள் உங்கள் கட்சிகளை வளருங்கள், நாம் அனைவரும் இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் வளர்த்தெடுப்போம் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் ஏனைய கட்சிகளையும் அவரவர் வளர்த்தால், அவற்றின் வளர்ச்சிக்காக அவரவர் செயற்பட்டாhல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன? அவ்வாறான ஒரு கூட்டமைப்பு அவசியமில்லை என்ற அர்த்தமா? அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பு இனிமேல் அவசியமில்லை என்று அர்த்தமா? இந்த வினாக்களுக்குத் தெளிவான விடை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது – தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அந்த அமைப்பின் உள்ளே இருப்பவர்களினாலேயே உடைக்கப்படுகின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
அத்துடன், புலிகளின் மறைவையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நன்மைக்காக உறுதியாகவும் உண்மையாகவும் செயற்படும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களினாலேயே குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்படுபவர்களினால் அந்த மக்களின் முகத்தில் கரிபூசப்படுகின்றது என்பதும் மிக மிக தெளிவாகப் புலனாகி வருகின்றது.
0 comments :
Post a Comment