Wednesday, October 20, 2010

சரத் பொன்சேகாவின் இடத்திற்கு பிறிதொருவரை நியமிப்பதை நிறுத்த முடியாது.

சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவடையும்வரை அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு வேறொருவரை நியமிக்க வேண்டாமென அறிவிக்க முடியாதென சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமைக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையிட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதி வழக்கறிஞர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகுமிடத்து அதனை நிரப்பும் நடவடிக்கைகள் அரசியல் யாப்பிற்கு உட்பட்டே நடைபெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பும் நடவடிக்கையை கைவிடுமாறு கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச் சட்டம் நாட்டின் பொதுச் சட்டம் அல்லவென சரத் பொன்சேகா சார்பில் மேன்முறையீ்ட்டு நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தெரிவித்தர். இவ்வாறான சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்றும், அவ்வாறு பறித்தால் அது சட்டவிரோதமானதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து மனு மீதான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை தொடர்ந்தும் இரு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுமென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment