Thursday, October 7, 2010

இலங்கை ஜனநாய சோசலிச குடியரசும் மகிந்த சிந்தனையும். - தேவன் (கனடா) -

'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' – யாரோ. மூன்று தசாப்தகால இடைவெளிக்கு பின்பு யுத்தம் தின்ற பூமியான இலங்கையின் வட பகுதிக்கு செல்வோருக்கு பல அதிசயங்கள், பல சோகங்கள், பல அனுபவங்கள் கொஞ்சம் பொறாமை என கலந்த உணர்ச்சிக்கலவையாக பல உணர்வுகள் மனதின் ஓரத்தில் வந்து வந்து அழுத்துவதும் நாம் திணறிப்போவதும் தவிர்க்க முடியாது.

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிப்புற்று தேசத்தைவிட்டு வெளியேறியவர்கள் கடந்த வருடம் வைகாசி மாதம் யுத்தம் ஓய்வுக்கு வந்த பின்பு உலகின் பலபாகங்களில் இருந்து தமது தாய் நாட்டை தரிசிப்பதற்காகவும் தமது எஞ்சி இருக்கும் உறவுகளை பார்ப்பதற்காகவும் குடும்பத்துடன் தாயகத்துக்கு வருகிறார்கள்.

யுத்தம் எவ்வளவு கோரமானது கொடுமையானது அரக்கத்தனமானது என்பதை ஏ9 பாதை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு பயணிப்போர் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள். வவுனியா கடந்து ஓமந்தை பரிசோதனையை முடித்துவிட்டு வாகனத்தில் பயணிக்கும்போது கிளிநொச்சி வரைக்கும் காணும் காட்சிகள் மனதில் இனம் புரியாத வலி மனதைத் துழைத்தெடுக்கிறது.

இடிந்து நொருங்கிப்போன கட்டிடங்கள், ஏ9 வீதியின் இருபக்கமும் அகண்ட வெளி எரிக்கப்பட்ட நிலையில் புற் தரைகள், மரங்கள், செடிகள். அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போர் எவ்வாறு கோரத்தை அனலை கக்கி இருக்கிறது என்பதை நிச்சயமாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இத்துயருக்கு யார் காரணம்? யார் பொறுப்பு? என்பதை இலங்கை அரசியலையும் வரலாற்றையும் தெளிவாக புரிந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். அண்மைக்காலமாக உலகில் யுத்தத்திற்கு புது வரைவிலக்கணம், வியாக்கியானம் கொடுக்கப்பட்டுவருகிறது. நடந்து முடிந்த ஈராக் போர் ஈராக் மக்களுக்கு விடுதலையை பெற்றக் கொடுத்ததாக யுத்தத்தை நடத்தியவர்களால் கற்பிக்கப்பட்டது. ஆப்கான் போரும் அதன் பிரகாரமே நடைபெறுகிறது.

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்திற்கும் மக்களை விடுவிப்பதற்கான மனித நேய யுத்தம் என தற்போதைய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. அத்துடன் இவ் மனித நேய யுத்தத்தில் இறுதிக் கணங்களில் ஒரு பொது மனிதர்கூட இறக்கவில்லை என ஊடகங்களுக்கு கூறப்பட்டது.

நான்காம் ஈழப்போர் அதாவது ஈழத்தை அடைவதற்கான இறுதிப்போர் மக்கள் மீது யாரால் திணிக்கப்பட்டது? மகிந்தவை ஆட்சி அரியணைக்குக் கொண்டுவந்து யுத்த நிகழ்சி நிரலை தேர்வு செய்யும்படி அரசுக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்பபடுத்தியதின் விளைவாக ஏதும் அறியாத 3 இலட்சம் மக்கள் யுத்தத்தின் துயரையும் பல ஆயிரம் மக்கள் , படைகள் , போராளிகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டது.

புலிகள் மீதான யுத்தத்தை அரசு செய்யும்போது உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்புடன் போரிடுவதாகவும் இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல எனவும் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்தது. இவ்வகையான கற்பிதம் புலிகளின் 30 வருட வரலாற்றை தெரிந்தவர்களுக்கு உண்மையாகப்பட்டது.
மேலும் பயங்கரவாதம் என்றால் என்ன? அதன் உருவாக்கம் யாது? அதனை உருவாக்குபவர்கள் யார்? நிச்சயமாக அடித்துக்கூறலாம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களுமே. தீவிரவாத பயங்கரவாத, மத அடிப்படைவாத அமைப்புகள் தோற்றம் பெறுவதற்கு மூலகாரணியாக இருக்கிறார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை பெரும்பான்மை இனத்தவர்களே தேசத்தை ஆழுபவர்களாகவும் சமூக பொருளாதார தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் தேச வளங்களை அனுபவிப்பவர்களாகவும் சுரண்டுபவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக இலங்கையை இதுவரை ஆட்சி செய்த அரசுகள் ஆழும் அதிகாரவார்க்கத்தினர் அரசியல் அதிகாரங்களை அமைப்பதிலும், அதிக அதிகாரங்களை தக்க வைப்பதிலும் பணம், புகழ், பொருள் சேர்ப்பதிலுமே ஈடுபட்டவர்களே ஒளிய இலங்கையை ஒரு பல சமூகங்கள் வாழும் தேசம் என கருதி யாரும் ஆட்சி செய்ய முன்வராதது இலங்கைத் தீவின் சாபக்கேடு.

இதுவரை காலமும் இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் வறுமையை போக்குவதிலோ வேலை வாய்ப்புக்களை பெருக்குவதிலோ நல்லாட்சியை, நல்ல நிர்வாகத்தை நடத்துவதிலோ ஈடுபாடு காட்டவில்லை. அதற்குப்பதிலாக பிரச்சினையை உருவாக்குவதிலும், அதிக ஊழல்களில் ஈடுபடுவதிலும் சிறுபான்மை இனங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது உதாசீனப்படுத்துவதிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடகளை தோற்றுவிப்பதிலும் இனவாதங்களை கக்குவதிலுமே ஆட்சி அதிகாரங்ளைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

உதாரணமாக இலங்கையை அன்றிலிருந்து இன்றுவரை பேரினவாதிகளும், கடும்போக்குவாதிகளும் இனவாதிகளும் குடும்ப ஆட்சியார்களுமே தேசத்தை இனவாத அடிப்படையில் கூறுபோட்டு வந்ததின் விளைவாகவே பயங்கரவாதம் உருவாகியது என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

77ம் ஆண்டு வரையில் இலங்கைத் தீவில் பல குறைபாடுகள் பின்னடைவுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இருந்தது. பாராளுமன்ற அரசியலுக்கு ஒரு மதிப்பு இருந்தது. அப்போது கண்ணியவான்கள், நேர்மையானவர்கள், தொலைநோக்கு பார்வையுள்ள இடதுசாரி தலைவர்கள் என மதிக்கப்ட்டக்கூடிய ஒரு ஆரோக்கியமான பாரம்பரியம் அனைத்து சமூகங்களிலும் காணப்பட்டது.

என்று ஜே. ஆர் அரசியல் அதிகாரத்துக்கு வந்தாரோ அன்றிலருந்து இன்றுவரை தனிநபர் அதிகாரமும் இனவாதமும் அழிவுகளும் அதனால் ஏற்பட்ட இனப்பூசல்களால் பல இலட்சம் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டதும் இவைகளுக்கிடையிலான பிளவுகளுமே ஏகபோக ஜனாதிபதி தனிநபர் அதிகாரத்துக்கு கிடைத்த பரிசாக இருக்கின்றன.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் பெரும்பாலும் துன்பத்தையே கொடுத்து வந்துள்ளன. இலங்கையை பொறுத்தமட்டில் மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரசும் அரசியல்வாதிகளும் மன்னிப்புக்கூட கோருவதில்லை.

ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு அடையாளம் ஒரு பாரம்பரியம் இருக்கும். அதனடிப்படையிலேயே மதிக்கவும் செய்வார்கள். உதராணமாக இலங்கையை எடுத்துக்கொண்டால் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் புத்தமத வழித்தோன்றல்கள். மதபோதனைப்படி வாழ்ந்துவருபவர்கள் என பிறமதத்தவர்கள் நினைத்துக்கொள்வார்கள் அதில் தவறு இல்லை. பெரும்பாலான சிங்கள மக்கள் பிற மதத்தவர்களுடன் இணக்கப்பாட்டுடன் மென்மையான முறையில் வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து ஆட்சிக்கு வருபவர்கள் அரசியல் அதிகாரம் செய்பவர்கள் ஏன்? புத்தமத்தை இயந்திரத்தனமாக பாவிக்கிறார்கள்? ஏன் புத்தமதத்தின் போதனைகைள ஆட்சியாளர்கள் பின்பற்றுவதில்லை? அப்படி பின்பற்றி இருந்தால் இலங்கைத் தீவில் மூன்று இரத்த ஆறு ஓட்டங்களை தவிர்த்து இருக்கலாமே என்ற கேள்வி பலரிடம் உண்டு.

அதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் எப்படி பதில் கூறப்போகிறார்கள்? இன்றைய இலங்கையில் நடைபெறும் ஆட்சிக்குப் பெயர் என்ன? இது ஒரு ஜனநாயக சோசலிச குரடியரசா? மன்னராச்சியா? மக்களாட்சியா? முதலாளித்துவ ஆட்சியா? அல்லது மகிந்த சிந்தனை தனிநபர் ஆட்சியா? அப்படியாயின் அது எல்லா காலத்துக்கும் பொருத்தமானதா?
தற்போது தேசத்தை நிர்வகிக்கும் பிரதான கட்சியினது பெயரில் 'சுதந்திர' என்னும் சொற்றொடரைக் கொண்டுள்ளது. இங்கு பல கேள்விகள் உருவாகின்றன. அதாவது மகிந்த சிந்தனையில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாம் சுதந்திரக் கட்சிக்கு மட்டும் தானா? ஏனையோருக்கு அது மறுக்கப்பட்டுள்ளதா? எதனால் பல பத்திரிகையாளர்கள் காணமல் போயுள்ளார்கள்? பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். சண்டே லீடர் ஆசிரியர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஏன்? எதற்காக?

தற்போதைய ஆட்சியில் ஆட்சியாளர்களைப் புகழ்பவர்களுக்கே செங்கம்பள வரவேற்பு. குறைநிலைகளை விமர்சிப்போருக்கு தேசத் துரோகப்பட்டம். ஏன் இந்த அரக்கத்தனம்? சந்திரிகா காலத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்த பத்திரிகை உலகம் மகிந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கிறது என சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.

உலக சரித்திரத்தில் அதிகாரத்தை தவறாக கையாண்டோருக்கு என்ன நடந்தது என்பதை வரலாற்று குறிப்புகள் துல்லியமாக பதிவு செய்துள்ளன. ''அதிகாரம் கூரிய வாள் போன்றது'// ஏனெனில் இருபக்கமும் அழிவை ஏற்படுத்தவல்லது.

மகிந்த சிந்தனையின் முக்கியத்துவம் கடந்த வருடம் வைகாசி மாதம் உணரப்பட்டது. கடந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாக சில தரப்புகள் சில விமர்சனங்களை முன்வைத்தாலும் பெரும்பாலானவர்கள் சுதந்திரக் கட்சியைப் பாராட்டினார்கள். ஆனால் கடந்த வைகாசி மாதத்திற்கு பின்னர் மகிந்த ஆட்சியையும் மகிந்த சிந்தனையையும் அவதானிப்பவர்களுக்கு அது ஒரு பிரபாகர சிந்தனைபோலவே செயற்படுகிறது எனவும் மகிந்த ஒரு சிங்கள பிரபாகரன் போன்று நடந்துகொள்கிறார் என விமர்சனங்கள் முன்வைக்க்பட்டுவருகின்றன. அதில் நிறையவே உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

சந்திரிகா ஒரு நேர்காணலில் மகிந்தவை ஒரு சண்டியர் என வர்ணித்தார். அதை ஒப்புக்கொள்ளும் வகையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இந்திய ருடே சீனியர் எடிட்டர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணலில் 'பிரபாகரன் காட்டுக்குள் இருந்தவர் நான் காட்டுக்குள் வளர்ந்தவன்' என தெரிவித்தார்.

கால் நூற்றாண்டுக்கு மேலாக பிரபாகரன் தன்னைப் புகழ்ந்தவர்களை தவிர தன்னை விமாச்சித்த அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் அழித்தே வந்துள்ளார். இதற்காக கையாண்ட பொறிமுறை தமிழ் தேசியம், புனிதம், தமிழ் சமூகத்தின் பாதுகாவலன், வீரம் போன்ற கருவிகள் ஆகும்.

இதேபோலவே மகிந்தவும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு ஒரு சிறு மாறுதலாக பாராளுமன்ற ஜனநாயத்தை பாவிக்கிறார். இன்றைய இலங்கை பாராளுமன்றத்துக்கு கூவம் நதிக்கும் பெரியளவு வித்தியசம் கிடையாது. ஏனெனில் வெள்ளை ஆடை அணிந்த அழுக்கர்கள்தான் இன்று இலங்கை மக்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நமது தேசத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளாக வறுமை, வேலையின்மை, ஊழல், குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அதிகார துஸ்பிரயோகம், ஏற்றத்தாழ்வு, சமூக இடைவெளிகள், இராணுவ மயப்படுத்தல், சிவில் நிர்வாகம் செயலிழப்பு போன்ற காரணிகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வலுவான எதிர்ககட்சி, பிராந்தியக் கட்சிகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
இத்தகைய ஒரு கையறு நிலையை மகிந்த சிநத்தனையே உருவாக்கி வைத்துள்ளது. மகிந்தவுக்கு புத்த போதனையில் பிடித்த கொள்ளை 3வது நிலை. அதாவது தன்மீது நெருக்கடிகளை திணிக்கும் போது நெருக்கடிகளை உடைத்து தன்னையும் பாதுகாத்து தேசத்தையும் பாதுகாப்பது. இந் நிலைப்பாடானது கடந்த மே மாதத்திற்கு முன்பு ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

புலிகளை வெற்றி கொண்டபின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறினார்கள். இனப்பிரச்சினைக்கு புலிகள்தான் தடையாக இருப்பதாக கூறினார்கள். ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இந்த அரசு அரசியல் தீர்வைப்பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை.

மகிந்த ஊடக நேர்காணலில் மட்டும் வீராப்பாக அலங்காரமாக பேசுகிறார். இலங்கையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிரச்சினை இல்லை நாம் அனைவரும் ஒரே குடும்பம். இனவாதம் இல்லை. வேறுபாடுகள் இல்லை என விபரித்துக்கொண்டே செல்கிறார்.
ஆனால் நடைமுறை யதார்த்தம் என்னவெனில் 30 வருடத்துக்கு முன்பு இருந்த தேச ஐக்கியம், சமூக ஒற்றுமை குறைந்து யுத்தத்தின் முடிவில் சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. மகிந்த சிந்தனையால் தேசத்தின் பரப்பளவைத்தான் இணைக்க முடிந்தது. தேசத்தின் மனங்களை அவரால் வெல்ல முடியவில்லை என்பதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

30 வருட போரால் சீரழிந்த தேசம் இயல்பான நிலைக்கு வரமுன்பே பல தேர்தல்கள், ஆட்சிகள், அதிகாரங்கள் 18வது அரசியமைப்பு திருத்தம், அதிகார வெளி, பதவி ஆசை, ஏதேச்சதிகாரம், ஜனநாய மறுப்பு இதுவா மகிந்த சிந்தனை. நீண்ட போரால் களைத்துப்போயுள்ள மக்களுக்கு மகிந்த சிந்தனை இன்று தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

சிங்கள சமூக அரசியல் பாரம்பரியம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. முற்போக்கானதும் கூட. 30 வருட பிரபாகர சிநத்தனையை தமிழ் சமூகம் வேடிக்கை பார்த்தது போல மகிந்த சிந்தனையை Justice is blind ஆன அரச யந்திரத்திற்கு நிச்சயம் மாற்றம் தேடுவார்கள். இன்றைய இலங்கைத் தீவில் குண்டுச் சத்தம், செல்லடி, வான் தாக்குதல்கள், ஊரடங்கு, போர்க்கெடுபிடி இல்லையே ஒழிய அதற்குப் பதிலாக இமாலய அளவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராடவேண்டிய தமிழ் கட்சிகள் வெறும் றப்பர் ஸ்டாம் ஆகவும், அறிக்கைகள் விடுவதிலும் தம் இருப்பை தக்க வைப்பதிலுமே பத்தோடு பதினொன்றாக ஈழக் குறியீட்டில் அடையாள அரசியலை நடத்திவருகின்றன.

மனித உரிமைவாதி மல்லிகா பெர்ணாண்டோ கூறியதுபோன்று மகிந்த என்றுமே இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரமாட்டார். தற்போது நடைபெற்ற 65வது ஐ.நா கூட்டத்தொடரிலும் இனப்பிரச்சினை பற்றி பேசும்போது சர்வதேசத்தின் அழுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இலங்கைக்குள்ளே இருந்து தீர்வு வரவேண:டும் என்று கூறுகிறார்.
ஆக தமிழ் தரப்பு என்ற தம்மை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்நிலைமைகளை கவனத்தில் எடுத்து தேசிய மட்டத்தில் உபாயங்களை வகுப்பதற்கும், போராடுவதற்கும் தம்மை தயார்ப்படுத்துவதோடு மகிந்த சிந்தனைக்கு மாற்றீடாக வேறொரு சிந்தனைக்கு உழைப்பதன் மூலமே நாளை நம் இருப்பை தக்கவைக்க முடியும் என நம்புவோம்.

மாற்றீடான சிந்தனை எனும்போது புலிச்சிந்தனையாக அது அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

No comments:

Post a Comment