Wednesday, October 20, 2010

'டக்ளஸ் தேடப்படும் குற்றவாளிதான்'

1986இல் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேடப்படும் குற்றவாளி தான் என சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி தெரிவித்திருக்கிறார்.

1986 சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் டக்ளஸ் தேவானந்தா இலங்கை திருபினார். அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படியே அமர்வு நீதிபதி பரஞ்சோதியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் டக்ளஸை 1994ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கறிஞர் வஜ்ரவேலு, சம்பந்தப்பட்ட அறிவிப்பு பொது அறிவிப்பாக முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. பத்திரிகை செய்திகள் வழியாகவே தெரிய வந்திருக்கிறது, எனவே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அன்றையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அக்பர் அலி தெரிவித்தார்.


No comments:

Post a Comment