பெனாசிர் பூட்டோவைக் கொன்றது பாக். தாலிபான்
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொன்றது தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பெனாசிர் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தானின் புலனாய்வு ஏஜென்சியின் கூட்டமைப்பு, மேற்கூறிய முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் "டான்" ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் இயக்கத் தலைவர் பைதுல்லா மசூத்தான் பெனாசிர் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பெனாசிர் பேசிக்கொண்டிருந்தபோது, தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.அவருடன் சேர்த்து மேலும் 24 பேர் அதில் பலியாகினர்.
பெனாசிர் இந்த தாக்குதலில் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவரது தலையை குறிவைத்து வாலிபர் ஒருவர் துப்பாக்கியை பிடித்துக்கொண்டிருந்த காட்சியும் கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment