Wednesday, October 20, 2010

கேபி விசாரணைகளுக்காவே வன்னி அழைத்துச் செல்லப்பட்டாராம்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலிகளுக்கான ஆயுத விநியோகிஸ்தர் கே.பி விசாரணைகளின் நிமிர்த்தமே வன்னி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களின் ஒருவரான தினேஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் கே.பி யிடமிருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்களை பகிரங்க படுத்தமுடியாது எனவும் புலிகளியக்கத்திடமிருந்து 110 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றில் எழுப்பிய வாய்மூல வினாவிற்கு விடையளிக்கும் போதே தினேஷ் குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திக் பெறுமதி 490 மில்லியன் ரூபாவென ஆளும் கட்சி பிரதம கொரடாவான அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 110 கிலோ கிராம் தங்கம் விசாரணைக்கென உரிய இடத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் மூன்று கேள்விகளை எழுப்பியதாகவும் அதற்கு ஆளும் கட்சி பிரதம கொரடா பதிலளித்ததாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச கட்டுப்பாட்டில் இருக்கும் குமரன் பத்மநாபன் என அழைக்கப்படும் கே.பி தொடர்பில் தயாசிறி ஜயசேகர முதல் கேள்வியை எழுப்பியுள்ளார். கே.பி ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கென இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரட பதிலளித்தார்.

பின்னர் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெறுவது எப்படி என தயாசிறி ஜயசேகர இரண்டாவது கேள்வியை எழுப்பினார். கே.பி யிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் ஒரு அங்கமாகவே கே.பி வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

மேலும், கே.பி எந்தத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மூன்றாவது கேள்வியை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவலை வெளியிட முடியாதெனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com