Thursday, October 7, 2010

இந்தியா, பாகிஸ்தான் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிடத் தயார்: பான் கி மூன்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு சமரச முயற்சிகளில் ஐ.நா.ஈடுபடத் தயாராக உள்ளது என்று அதன் பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். ஐ.நா.நாடுகள் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூனிடம், காஷ்மீரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வன்முறை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா.அவை ஏன் தனது செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த பான் கி மூன், “முதலில் அவர்கள் (பாகிஸ்தான், இந்தியா) அண்டை நாடுகள், அப்பகுதியில் முக்கியமான நாடுகள், எனவே அங்கு அமைதியும், பாதுகாப்பும் முக்கியமான அம்சங்களாகும். எங்களுடைய செல்வாக்கை செலுத்துவது தொடர்பாக கூறுவதென்றால், அதில் சம்மந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே ஐ.நா. எந்த முன் முயற்சியும் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்டுவரும் மனித உயிரிழப்பிற்காக தான் வருந்துவதாகத் தெரிவித்த பான் கி மூன், அப்பிரச்சனையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொ்ண்டுள்ளார்.

காஷ்மீரை இந்தியா ஒருங்கிணைந்த அங்கும் என்று இந்திய அரசு கூறுகிறது. அது இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்ட பகுதி என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், காஷ்மீரில் மக்கள் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களோ, அது காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயப் பிரச்சனை என்றும், இதில் காஷ்மீர் மக்களே முடிவு செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment