குறுகிய நோக்கமுடைய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தூர சிந்தனையற்றவர்களாகப் பல்கலைக்கழகத்தின் சீரிய கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பவர்களாயிருப்பதாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக இந்து மா மன்றம் நடத்திய "திரிவேணி சங்கமம்' கலை விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்து மா மன்றத் தலைவர் காசுபதி பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் உபவேந்தர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் "ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக சமூகமும் பெற்றோரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளமை இக்காலகட்டத்தில் சிறந்த நடவடிக்கையாகும். பல்கலைக்கழக சமூகம் இவ்வாறு விழிப்பாக இருக்குமானால் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எவ்வித இடையூறுகளுமின்றி முன்கொண்டு செல்லப்படும்.
பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒழுக்க முறை ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டுவந்துள்ளார். இது நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே கல்வி நடவடிக்கைகளுடன் நின்றுவிடாமல் சிறந்த அறநெறியைக் கடைப்பிடிப்பதுடன், தொழிற் கல்வியுடன் ஆங்கிலம் மற்றும் கணினி தொடர்பான அறிவையும் விருத்தி செய்ய வேண்டும். இதற்கென அரசும் மிகக் கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளது. பல்கலைக்கழக சமூகத்தின் நல்லிணக்க வாழ்விற்கும் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் இவ் இந்து மா மன்றத்தின் செயற்பாடுகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமெனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment