அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் மீண்டும் கைது.
அனைத்துப்பல்கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர் ஒன்றியத்தின் ஆழுநரான உதுல் பிறேமரத்தின இன்று நண்பகல் கோட்டே பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டம் ஒன்றின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள உதுல் பிரேமரட்ன இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக நுகேகொடை பொலிஸ் பிரிவின் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். உதுல் பிரேமரட்ன தற்போது நுகேகொடை பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் உதுல் பிரேமரட்ன இன்று கோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இச்சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கடந்த சிலவாரங்களாக விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை நாடாத்திய உதுல் பிறேமரத்தின , பல்கலைக்கழகக் கட்டமைப்பை அழிப்பதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் பல்கலைக்கழகக் கட்டமைப்பை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. விசேடமாக பல்கலைக்கழக மாணவர்கள் 220ற்கும் மேற்பட்டோருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக பீடங்களை மூடி. ரஜரட்டை போன்ற பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டை முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்தது.
இது தொடர்பில் தெளிவுபடுத்த எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நாங்கள் எதிர்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டோம். பல்கலைக்கழகங்களில் ஏற்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசாங்க பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அடுத்த வாரம் எதிர்கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு விரிவான கலந்தரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் நீதி மற்றும் அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்துகின்றது. பதாதைகள் ஒட்டுவதற்குக்கூட அனுமதியில்லை அவர்களையும் கைது செய்கின்றனர். என அவர் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment