Thursday, October 7, 2010

தமிழ் மக்கள் கூடாரங்களில் வாடுகையில் தமிழுக்கு விழா எடுப்பது அவசியமா?

அ.கீதபொன்கலன், J.P
207,புனிதசெபஸ்ரியார்.வீதி,
மன்னார
06.10.2010

அருட்பணி. தமிழ்நேசன்
தலைவர்,
மன்னார் தமிழ்ச் சங்கம்,
மன்னார்

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழ்ச் செம்மொழி விழாவிற்கு நிதி உதவி கோரல் எனும் தலைப்பின் கீழ் மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்டேன். இவ் விழா தொடர்பான எனது கருத்துக்களை தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

மன்னார் மக்களின் கலை இலக்கியத் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, மன்னாரின் கலை இலக்கிய வளத்தை ஒரே மேடையில் கண்டுகளிப்பது, ஆய்வரங்குகள் ஊடாக தமிழ் மொழி, தமிழ் கலைகள், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு போன்ற விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போன்ற பல நோக்கங்களை இலக்காகக் கொண்டு இவ் விழாவை ஏற்பாடு செய்கின்றோம் என்றும், ஒக்டோபர் 22ம்
திகதியிலிருந்து 25ம் திகதிவரை காலையும் மாலையும் ஆரம்பவிழா, இசைவிழா, இலக்கியவிழா, நாட்டிய விழா, நாடக விழா, நிறைவு விழா எனத் தொடரச்சியாக பல அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

எமது மாவட்டத்தில் மேற்படி விழா எடுக்கவிருப்பது யாவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருப்பினும் முதலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசரமானதும் அவசியமானதுமான பல தேவைகளில் ஒன்றையாவது நிறைவேற்ற தமிழ்ச்சங்கம் என்ன நடவடிக்கை எடுத்ததென பலர் வினா எழுப்புகின்றனர். அத்துடன், முழு மாவட்டத்தின், பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அடங்கலாக, வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் இவ் விழாவிற்குத் தங்களது பங்களிப்பைச் செய்யும்
நிலையில் இருக்கிறார்களா?

எமது மாவட்டத்தின் மாந்தை மேற்கு, மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைச் சார்ந்த அனைத்து மக்களும், அத்துடன் நானாட்டான், முசலி பகுதிகளைச் சார்ந்த ஒரு பகுதி மக்களுமாக, கிட்டத்தட்ட மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள், நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பிடியில் அகப்பட்டவர்கள் என்பதையும், அதிலிருந்து உடனடியாக மீளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதையும், மன்னார் தமிழ் சங்க நிர்வாகம் புரிந்துகொண்டு செயற்படாமல் விட்டது ஏன் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து, உறவுகளைப் பிரிந்து பிரிந்த உறவுகள் எங்கிருக்கின்றார்களோ என்று தெரிந்துகொள்ள முடியாமல் வேதனையுடன் வாழும் மக்கள் ஒருபுறமும், பிரிந்த உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்து விட்டார்களா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருப்போர் மறுபுறமும், ஊனமுற்று விதவைகளாக்கப்பட்டு அனாதைகளாக்கப்பட்ட மக்கள் இன்னொரு
புறத்திலுமாக, வாழ்ந்து கொண்டிருக்கையில் அம் மக்களின் பங்களிப்பு தமிழ் செம்மொழி விழாவிற்கு எப்படிக் கிடைக்கப் போகிறது? மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பங்களிக்காத நிலையில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ச் செம்மொழி விழா ஏற்பாட்டின் நோக்கங்கள் எப்படி முழுமை பெற முடியும்.?

முழு மன்னார் மாவட்டத்தையும் மையமாகக் கொண்டதாக, மாவட்டம் முழுவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழாவாக, இது அமைய வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கருதுவார்களாகில், மாவட்டத்தின் மூலை முடுக்குகள் அனைத்திற்கும், இதுபற்றிய செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலும், கிராமிய மட்டத்திலும் பல தலைப்புக்களிலான சொற்பொழிவுகள், கட்டுரைகள், கவிதைகள், கலை நிகழ்வுகளுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு, தரமானவை தேர்ந்தெடுக்கப்பட்டு விழா மண்டபத்தில் அரங்கேற்றப்படல் வேண்டும். இதன் மூலம் ஒரு சிறிய வட்டத்தினுள் அடங்குபவர்கள் திறமைசாலிகளாக தெரிவு செய்வது தடைசெய்யப்பட்டு பரந்த அடிப்படையில் திறமைசாலிகள் வெளிப்படுத்தப் படுவார்கள். அதைவிடுத்து கால அவகாசமின்றி ஏற்பாடுகள்
செய்யப்பட்டால், ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் ஒடுங்கிவிடும் என்ற எனது கருத்தை தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

அடுத்தபடியாக இந் நிகழ்வுக்காகத் தாங்கள் தெரிந்துகொண்ட தினங்கள் அடை மழை காலமாகும். தாங்கள் இங்கு விழா எடுத்து, மகிழும் அதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழினம் சிறு சிறு கூடாரங்களிலும், தற்காலிக ஓலைக் குடிசைகளிலும் வாழ்ந்துகொண்டு, குழந்தைகள், வயோதிபர்கள், ஊனமுற்றோர் ஆகியோரை அடைமழையிலிருந்து காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பர்.

தன் மக்களில் பலர் துன்புற்றிருக்க சிலர் மட்டும் பெருந்தொகைப் பணச்செலவில் (ரூபா இரண்டு மில்லியன்) தனக்குப் பெருவிழா எடுப்பதை தமிழ்த்தாய் எப்படி ஏற்றுக் கொள்வாள்.

ஆகவே நம் தமிழ்த்தாய்க்கு முழு மன்னார் மாவட்ட மக்களும் கைகோர்த்து பெருவிழா எடுப்பதற்கான கலன் ஜே. பி காலம் கனியும்வரை, விழாத் தினங்களை பிற்போட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

அ. கீதபொன்

No comments:

Post a Comment