Tuesday, October 12, 2010

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவரின் மனைவி கைது

பெய்ஜிங் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த லியூ ஜியாபோவின் மனைவியை சீனப் போலிசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக மனித உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. திரு லியூ ஜியாபோவின் மனைவி லியூ ஜியா மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை என்றும் ஆனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழுவின் ஆலோசகர் கூறினார்.

தன் கணவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதை சிறையில் இருக்கும் தன் கணவரிடம் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய லியூ ஜியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை விட்டு வெளியில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.

அவரது வீட்டு வாசலில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவரது தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழு கூறியது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள திரு லியூ ஜியாபோ தற்போது சிறைச்சாலையில் உள்ளார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனநாயக சீனாவுக்காக குரல் எழுப்பிய ஒரு புத்தகத்தை எழுதிய 8 கதாசிரியர்களில் லியூ ஜியாபோவும் ஒருவர். சிறையில் இருக்கும் லியூ ஜியாபோ, தனக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்திருப்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்டதாக பெய்ஜிங் தகவல் கூறியது.

No comments:

Post a Comment