Wednesday, October 27, 2010

யுஎஸ் அணு ஏவுகணை கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப சிக்கல்!

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் 50 அணு ஆயுத ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விமான தளத்தில் திடீரென்று கருவிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கு செயல்படவில்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைப்பான பெண்டகன் கூறியுள்ளது.

அமெரிக்க விமானப் படையின் வியோமிங் தளத்தில் கடந்த சனிக்கிழமை இவ்வாறு ஏற்பட்டதென்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை பேச்சாளர் லெப். கர்னல் டாட் விசியன், கருவிகள் செயல்படாதது ஏன் என்று இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் செயல் மையமான வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், திடீரென ஏற்பட்ட இந்த செயல்பாட்டுச் சிக்கலிற்கு எந்த ஒரு வெளித் தலையீடும் இருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் டாட் விசியன் தெரிவித்துள்ளார்.

வியோமிங்கின் செயன்னி என்ற இடத்திலுள்ள அமெரிக்க விமானப் படையின் 319வது ஏவுகணை தளத்தில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் (Intercontinental Ballistic Missiles- ICBM) 150 ஏவுகணைகளை நிறுத்தப்பட்டுள்ளன. அதில் அணு ஆயதத்தைத் தாங்கிச் சென்றுத் தாக்கும் 50 மைனியூட்மென் III என்றழைக்கப்படும் ஏவுகணைகளின் இயக்கச் செயல்பாடு ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. இவை அமெரிக்காவின் ஒட்டுமொத்த அணு ஆயுத ஏவுகணைகளில் ஒன்பதில் ஒரு பங்குதான் என்றும் குறிப்பிட்ட டாட் விசியன், ஆயினும் அவைகளை மற்றொரு வகையில் இயக்கும் திறனை விமானப் படை பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வியோமிங் மட்டுமின்றி, மோன்டானா, வடக்கு டகோட்டா ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்களிலும் இப்படிப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாம்.

அமெரிக்க விமானப் படைத் தளத்தில் ஏற்பட்ட இந்த செயல்பாட்டுச் சிக்கலை (equipment failure) எதற்காக வாஷிங்கடனில் பன்னாட்டு செய்தியாளர்களிடம் அமெரிக்க அறிவிக்கிறது என்பது புரியவில்லை. ஒருவேளை அமெரிக்காவிடம் தயார் நிலையில் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மட்டும் 450 எப்போதும் தயார் நிலையில் உள்ளன என்பதைத் தெரிவிப்பதற்கோ?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com