Thursday, October 21, 2010

600 பொலிஸாரின் கொலைகளுக்கு பொட்டு , நீயுட்டன் ஆகியோரே பொறுப்பு. கருணா

1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் திருக்கோவில் , கஞ்சிகுடிச்சாறுப் பிரசேதங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 600 பொலிஸாரினதும் கொலைகளுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரும் அமைச்சருமான கருணா எனப்படும் முரளிதரன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இன நல்லிணக்ககுழு முன்னிலையில் சாட்சியமளித்த பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனிடம் : மேற்படி கொலைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டிய அவசியத்தை உணர்கின்றீரா என கேட்கப்பட்டபோது, மன்னிப்புக் கோருவதானால் அதை கருணாவே செய்யவேண்டும் என தெரிவித்திருந்தாக வெளியான செய்தி தொடர்பாக அமைச்சர் முரளிதரனை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக கருணா இலங்கைநெற் இற்கு கூறுகையில் : நான் மன்னிப்புக்கோரவேண்டும் எனக் பிள்ளையான் கூறினாரா என்பது எனக்கு சரியாக தெரியாது. அவ்வாறு அவர் கூறியிருந்தால்கூட அது முன்னுக்கு பின் முரணான கருத்தேயாகும். காரணம் அச்சம்பவம் நடந்தபோது தான் புலிகளியக்கத்தில் இருந்திருக்கவில்லை என்பதை பிள்ளையான் கூறியுள்ளார். அவ்வாறாயின் இச்சம்பவங்களுடன் யார் சம்பந்தப்பட்டிருப்பர் என்பது அவருக்கு எவ்வாறு தெரிந்திருக்கமுடியும் என்றார்.

எவ்வாறாயினும் மேற்படி சம்பவத்திற்காக மன்னிப்புக்கோரும் உத்தேசம் உண்டா எனக்கேட்டபோது, குறிப்பிட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பிறர்புரிந்த குற்றத்திற்காக நான் மன்னிப்புக்கோரமாட்டேன் எனவும் : இச்செயலை பொட்டு , நியுட்டன் போன்றோரே செய்திருந்தனர் எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com