Wednesday, October 27, 2010

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் : 30 வருட சிறைத்தண்டனை. தமிழினிக்கு விளக்க மறியல்.

1999ம் ஆண்டு கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக இனங்காணப்பட்ட சக்திவேல் இளங்கேஷ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றவேளையில் பிரதிவாதி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டநிலையில் பிரதிவாதியான சக்திவேல் இளங்கேஷ்வரனுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுன் 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவு தலைவி எனக் கூறப்படும் தமிழினி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

தமிழினி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு சமர்பிக்க்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்பித்து இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரை அடுத்த மாதம் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com