போலி மக்களாட்சியும் மோசடியும்: 2010ம் ஆண்டு தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர். Patrick Martin
2010 தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கையில், ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெரு வணிகத்திற்கு எதிரான மக்கள் விரோதப் போக்கிற்கு கடைசி நிமிட மோசடித்தனமான அழைப்புவிடும் வகையில் பெரும் தேர்தல் தோல்வியைத் தவிர்க்க முற்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆதரவில் திரட்டப்பட்ட பிலடெல்பியாவில் ஞாயிறன்று நடைபெற்ற அணிவகுப்பில், ஒபாமா “மில்லியனர்கள், பில்லியனர்கள்”, “வோல் ஸ்ட்ரீட் வங்கிகள்”, “பெருநிறுவனங்கள்”, “எண்ணெய்த் தொழிற்துறை”, “காப்பீட்டுத் தொழில்துறை” மற்றும் “கடன் அட்டை நிறுவனங்கள்” ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினார்
“AIG மற்றும் Exxon Mobil உடைய முன்னாள் செல்வாக்குத் திரட்டுபவர் ஒருவர்”, குடியரசுக் கட்சி ஏற்றுள்ள “அமெரிக்காவிற்கு உறுதிமொழியை” எழுதுவதற்கு உதவியுள்ளார் என்று ஒபாமா குற்றம் சாட்டினார். இதன் பின் “இந்த உறுதிமொழியின் மையத்தானத்தில் $700 பில்லியன் வரிக் குறைப்புக்கள் உள்ளன என்றும் இவை உயர்மட்ட 2 சதவிகிதமானது அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் 2 சதவிகிதத்திற்குச் செல்லும்” என்றும் அறிவித்தார்.
போலித்தனமாக மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வணிகத்தினரை தாக்குவது கடந்த வாரத்தில் அமெரிக்க சோவனிசத்தின் இழிந்த தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒபாமாவும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகவாதிகளும் அவர்களுடைய எதிராளிகள் “வெளிநாட்டினர் உரிமை கொண்ட பெருநிறுவனங்களில்” இருந்து நிதி நலம் பெறுகின்றனர் என்று குறைகூறியுள்ளனர். இது குடியரசுக் கட்சிக்கு ஒற்றை மிகப் பெரிய நிதி திரட்டும் அமைப்பான அமெரிக்க வணிகக் குழு மூலம் செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் என்ற குற்றச்சாட்டு ஜனநாயகவாதிகளை அதை கொடியில் சுற்றியுள்ளதுடன், குடியரசுக் கட்சியனருடன் தேசியவாதம் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிரான உணர்வுகளுக்கு அழைப்புவிட போட்டியி்ட வைத்துள்ளது. ஆனால் இதில் உண்மை ஏதும் இல்லை. ஜனநாயகக் கட்சியைப் போல் குடியரசுக் கட்சியும் உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கருவிதான்.
ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் போலித்தன மக்களைத் திருப்தி செய்யும் வனப்புரைகளை நிதிய பெருநிறுவன உயரடுக்கிற்கு நலன்களை அளிக்கும் வலதுசாரிக் கொள்கைகளுடன் இணைக்கின்றனர். வேலையின்மை மற்றும் வீடிழத்தல், வறியநிலை என்னும் பெரும் பேரழிவை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு இவர்கள் கொடுக்கக் கூடியது ஏதும் இல்லை.
தன்னுடைய நிர்வாகம் பெருமந்தநிலைக்குப் பின்னர் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்படக் காரணமாக இருந்த நிதிய அமைப்புக்களை “இறுதியில் பொறுப்பிற்கு உட்படுத்த உள்ளது” என்று ஒபாமா கூறுகையில், ஒபாமா-புஷ் பிணைஎடுப்பு கூட்டாட்சி அரசாங்கத்தின் முழு நிதிய ஆதாரங்களயும் வோல் ஸ்ட்ரீட்டின் மீட்புக்குக் கொடுத்தது.
ஒரு பெரிய பொதுப்பணிகள் திட்டத்தின் மூலமோ, இப்பொழுது மூன்றாவது முழு ஆண்டில் இருக்கும் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த வறிய நிலை, வெகுஜன இடர்களைக் குறைப்பதற்கு வேலைகளைத் தோற்றுவிக்கும் முயற்சியாக எந்தத் தீவிரத் திட்டத்தையோ நிர்வாகம் நிராகரித்துள்ளது. சராசரி வேலையின்மைக் காலம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துவிட்டது.
இந்த வாரம் ஒபாமா வெற்றுத்தனமாக வெகுஜனத்திருப்தியளிக்கும் கோஷங்களைக் கூறிக்கொண்டிருக்கையில், அவருடைய செய்தித்தொடர்பாளர்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் வீடுகள் ஏலத்திற்கு விடுவது நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான முறையீடுகளை நிராகரித்துப் பேசினர். வங்கிகள் மற்றும் அடைமானக் கடன் கொடுப்போர் முறையாக மோசடி செய்துள்ளனர் என்பதற்குப் பெருகிய சான்றுகள் இருந்தும் இந்நிலைதான்.
அடுத்து மாதத் தேர்தல்களின் அடிப்படை விளைவு, நவம்பர் 2 தேர்தல்கள் குடியரசுக் கட்சியினருக்கு காங்கிரஸ் மீது கட்டுப்பாடு கொடுத்தாலும் அல்லது குறைந்த பெரும்பான்மையுடன் ஜனநாயகக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் உறுதியானதுதான். ஒபாமா நிர்வாகம் இன்னும் வலதிற்கு நகரும்-இது பொதுமக்கள் கருத்திற்கு ஏற்ப என்று கூறப்படும்.
2010 தேர்தல் பிரச்சாரத்தின் உத்தியோகப்பூர்வ விவரம், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தின் மூலம் படிப்படியே வெளிவருவது வெளிப்படையாக வலதுசாரியாகவும் பெயரளவிற்கு தாராளவாதமாகவும் இருக்கும்-இது ஒபாமா இடதிற்கு மிகவும் அதிகமாகச் சென்றுள்ளார் என்று கூறும். செய்தி ஊடகத்தின் கருத்துப்படி அவருடைய பெரும் கூட்டாட்சிச் செலவுகள் என்று கூறப்படுபவை பொதுமக்களிடையே ஆழ்ந்த சீற்றத்தை ஏற்படுத்தி, அவை தேநீர் விருந்துப் பிரச்சாரங்களுக்கு பெருகிய ஆதரவு வந்துள்ளதில் பிரதிபலிக்கிறது.
இப்படிப் பெறப்பட்டுள்ள அறிவு புஷ் மற்றும் குடியரசுக் கட்சியை இரு ஆண்டுகளுக்கு முன் நிராகரித்தவர்கள் இப்பொழுது போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத சமூக நெருக்கடிக்கு நடுவே இன்னும் கூடுதலான பெருநிறுவனச் சார்புடைய கொள்கைகளை விரும்புகின்றனர்-செல்வந்தர்களுக்கு வரிக் குறைப்புக்கள், கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல், சமூகத் திட்டங்கள் அகற்றப்படல்-என 2008ல் அவர்கள் முடிவிற்கு கொண்டு வர வாக்களித்த அனைத்தையும் விரும்புகின்றனராம்.
இக்கருத்தாய்வில் அமெரிக்க அரசியலானது குடியரசு வலது மற்றும் ஜனநாயக “இடது”க்கும் இடையே பிரிவு வழியில் பிளவுற்றுள்ளது. இருக்கும் கட்சிகள் பற்றி அதிருப்தி அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு நடுவே இருப்பதாகக் கூறப்படும். இத்தகைய மரபார்ந்த அறிவைச் சுருக்கமாகக் கூறுகையில் Los Angeles Times இன் டோய்ல் மக்மனஸ் தேர்தல்கள் பற்றி எழுதினார்: “மையத்தைப் பின்பற்றும் கட்சி வெற்றி அடையும்.”
ஒபாமா நிர்வாகத்தின் உண்மை வலதுசாரிச் சான்றுகளைச் சிதைக்கும் விதத்தில் அமெரிக்க அரசியல் வாழ்வின் சித்திரம் முக்கியமான உண்மையைப் புறக்கணிக்கிறது: மக்களில் பெரும்பாலானவர்களாக இருக்கும் தொழிலாளர் வர்க்க மக்களின் உண்மை உணர்வுகளை ஆகும்.
வரலாற்றில் ஒருபொழுதும் முதலாளித்துவ முறையின் ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வெகுஜனத்திடம் சார்பு மாற்றம் ஏற்பட்டதில்லை. மாறாக, கருத்துக் கணிப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வோல்ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் மீது மக்கள் வெறுப்பைத்தான் காட்டியுள்ளன. இவர்கள் மிகச் சரியான விதத்தில் வேலைகள் இழப்பு மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்கள் ஆவர். அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் இடதிற்கு நகர்கின்றனரே ஒழிய வலதிற்கு அல்ல.
அமெரிக்காவின் வினோதமான அரசியல் வழிவகைக்குள், உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இரு கட்சிகள் என்ற வரம்பிற்குள், இரண்டும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வலதுசாரிக் கொள்கைகளை மட்டுமே கொடுக்கும் நிலையில், மக்களுடைய இந்த மாற்றத்திற்கு அரசியல் வெளிப்பாடு ஏதும் கிடைக்கவில்லை. தற்பொழுதைய தேர்தல் பிரச்சாரத்திற்கு நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் கூட, இருக்கும் அரசியல், சமுதாய அமைப்பு முறைகள் மாற்றத்தக்கன என்ற கருத்தில் உள்ளவைகூட, ஒபாமா நிர்வாகத்தின் மீது பெரும், அதிகரிக்கும் அதிருப்தி குடியரசு வலதிற்கு ஆதரவைத் தோற்றுவித்துள்ளது என்ற கூற்றை நிராகரித்துள்ளன.
Zogby International கருத்துக் கணிப்பு, சுதந்திர வாக்காளர்களைக் கருத்திற்கொண்டு நடத்தப்பட்டது, 13 சதவிகிதத்தினர் தான் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாகவும் 5 சதவிகிதத்தினர் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் எண்ணிக்கைகள் இரு பெரிய முதலாளித்துவக் கட்சிகளிடத்தும் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அதிருப்தியைக் காட்டுகின்றன.
அக்டோபர் 7-10 திகதியில் நடத்தப்பட்ட ப்ளூம்பெர்க் கருத்துக் கணிப்பானது ஒபாமாவிற்கு முன்பு ஆதரவு கொடுத்திருந்தவர்களில் 40 சதவிகிதம், 2008 ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து இரண்டே ஆண்டுகளில் இப்பொழுது அந்த அளவு ஆதரவு கொடுக்கவில்லை, அல்லது அவரை ஆதரிக்கவே இல்லை என்று கூறியதாகக் கண்டறிந்துள்ளது. ஒபாமாவின் சமீபத்திய வெகுஜனத் திருப்தி தரும் வனப்புரை குடியரசுக் கட்சியினராலும், செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளாலும் “வணிகர்-எதிர்ப்பு” என்று தாக்கப்பட்டாலும், ப்ளூம்பெர்க் பேட்டி கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இக்குறைகூறலை நிராகரித்துள்ளனர். அவர்களில் பலரும் ஒபாமா நிர்வாகம் மிகக் கடுமை என்பதை விட மிக மிருதுவாகத்தான் வோல் ஸ்ட்ரீட்டிடம் நடந்து கொள்வதாகக் கூறியுள்ளனர்.
ப்ளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டாட்சித் திட்டத்தில் முக்கிய குறைப்பு ஒவ்வொன்றையும் அநேகமாக நிராகரித்தனர்: அதாவது சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து, நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குதல், கல்வி ஆகியவற்றிற்கான செலவுக் குறைப்புக்களை ஆகும். சமூகப் பாதுகாப்பு தனியார் மயமாக்கப்படல் அல்லது அதற்கான வயதுத் தகுதி அதிகமாக்கப்படுவது ஆகியவற்றை அவர்கள் முற்றிலும் எதிர்த்துள்ளனர். பெரும்பாலானவர்கள் புஷ்ஷின் புதிய செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதை எதிர்த்துள்ளனர்.
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் நிதியப் பிரபுத்துவம் மற்றும் அதன் இரு கட்சிகளின் கொள்கைகளுடன் மோதல் போக்கில் நகர்ந்து கொண்டு வருகின்றனர். நவம்பர் தேர்தலைத் தொடர்ந்து சிக்கனக் கொள்கைகள் நடவடிக்கைகள் வரும். இவற்றில் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப்பாதுகாப்பு, பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பெறல் ஆகியவை அடங்கும். மேலும் ஆப்கானியப் போர் தீவிரமாவது அடையாளம் காட்டப்படும். ஈராக்கிலும் ஏனைய இடங்களிலும் அமெரிக்க இராணுவத் தலையீடுகள் தொடர்தலும் அடையாளம் காணப்படும். உள்நாட்டிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் முடுக்கிவிடப்படும்.
வேலைகள் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என பெருநிறுவனத் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தின் எழுச்சி ஒன்றுதான் ஒரே வழியாகும். சோசலிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் திட்டம் ஒன்றை சோசலிசச் சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. உலக சோசலிச வலைத்தள வாசகர்கள் இத்திட்டத்தைப் பரிசீலித்து சோசலிசச் சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டியமைக்குமாறு நாம் அழப்பு விடுகிறோம்.
0 comments :
Post a Comment