ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 11 பேர் பலி.
பாகிஸ்தானில் இடம்பெற்ற விமானத்தாக்குதலில் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமேல் பாகிஸ்தானில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் விமானத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற விமான ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட அதேவேளை, அப்பகுதியில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற தாக்குதலில் 6 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் தலிபான் மற்றும் அல் ஹைடாப் போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விமானங்கள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மேலும், வியாழக்கிழமை வட வஜிரிஸ்தான் பகுதியின் மிரான் ஷா நகரிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இஸ்மாயில் ஜெல் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரபு நாட்டைச் சேர்ந்த 3 போராளிகளும் ஆப்கானியர் ஒருவரும் மற்றும் உள்ளூர் வாசியொருவரும் கொல்லப்பட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.
இந்த வருட ஆரம்பம் முதல் வஜிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட விமானத்தாக்குதல்களில் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment