இலங்கையின் ஜனநாயகம் மீறப்படும் நிலையில் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் போதுமானதாக காணப்படவில்லை என ஜேவிபி குற்றஞ்சுமத்துகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றினுள் மாத்திரம் உத்தியோகபூர்வமான எதிர்கட்சியாக காணப்படுகின்றது. ஆனால் அது மக்கள் மத்தியில் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது எனவும் ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதிர்கட்சிகளை சிதைப்பதற்கு தனது முழுப்பலத்தையும் பிரயோகிப்பதாக தெரிவிக்கும் ரில்வின் சில்வா அவர்கள், எதிர்கட்சியிலுள்ள பலவீனமானவர்களை பணம் , பதவிகளை கொடுத்து கொள்வனவு செய்யும் அரசாங்கம் ஏனையோர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை நீதிமன்றுக்கு தள்ளும் , சிறைகளில் அடக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜெனரல் பொன்சேகாவை மாத்திரம் சிறையில் அடைக்க முற்படவில்லை எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவ்வாறு செய்ய முயற்சித்துள்ளது எனக் கூறும் அவர் , எதிர்கட்சிகளின் ஐக்கியம் பலம் என்பவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன் எதிர்கட்சிகள் யாவும் ஒன்றுபடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment