ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடர் இடம்பெறும்போது தென்கிழக்காசிய நாட்டுத் தலைவர்கள் 10 பேரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசவுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா கூட்டத்தொடரில் நம்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்வரும் 24ம் தேதி இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் நோக்கம் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பரந்த ஒத்துழைப்பை நாடுவது என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
தென்கிழக்காசிய வட்டாரத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குழுவினர் புறக்கணித்ததாகக் கூறும் திரு ஒபாமா, இவ்வட்டாரம் குறித்த அமெரிக்கக் கொள்கையைப் புதுப்பிக்க எடுக்கும் புதிய முயற்சி இது எனத் தெரிவித்துள்ளார் .
சென்ற ஆண்டு, பத்து ஆசியான் நாட்டுத் தலைவர்களுடன் சிங்கப்பூரில் திரு ஒபாமா நடத்திய முதல் கூட்டத்தைத் தொடர்ந்து, நியூயார்க் கூட்டம் நடைபெறுகிறது. சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தின்போது, 'வர்த்தகம் முதலீடு, வட்டாரப் பாதுகாப்பு, பேரிடர் நிர்வாகம், உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்க அதிபரும் ஆசியான் தலைவர்களும் உறுதி எடுத்தனர்' என்று வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.
இவ்விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆசியான் தலைவர்களுடன் அதிபர் ஒபாமா கலந்து பேசுவார் என்றும், அமெரிக்கா-ஆசியான் உறவை வலுப்படுத்தக்கூடிய வருங்காலத் திட்டங்களை அடையாளம் காண்பார் என்றும் அறிக்கை தெரிவித்தது. - ஏஎப்பி
No comments:
Post a Comment