நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்காக ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜெனீவா செல்லவுள்ளார். சரத் பொன்சேக்காவின் உரிமைகளை மீறி அநீதியான வகையில் வழக்குத் தீர்ப்புகளை வழங்கி அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக டிரான் அலஸ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வார் என ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சரத் பொன்சேக்கா சார்பில் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த மாதம் இரண்டாம் தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே டிரான் அலஸ் ஜெனீவா செல்லவிருப்பதாக கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேக்காவுக்கெதிராக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்திற்கெதிரானதென ஐ.தே.க சபாநாயகரிடம் அறிவிக்க தீர்மானம்!
இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்திற்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் எதிரானது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தமது எதிர்ப்பை எழுத்துமூலம் சபாநாயகருக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பானது சட்டத்திற்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது என தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த சில தினங்களில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளார். அதேவேளை இது குறித்த சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திலும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதுடன் இதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது. தனது மருமகனுக்கும் ஹைகோப் நிறுவனத்திற்கும் இருந்த தொடர்புகளை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேக்காவுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஹைகோப் நிறுவனத்திடமிருந்து தொலைநோக்கிக் கருவிகள் 10 வோல்ட் திறன்கொண்ட 50 மின்கலங்கள், 5 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 50 மின் உற்பத்தி இயந்திரங்கள், மூன்று ஜி.எஸ்.பி கருவிகள் ஆகியன கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. எனினும், சரத் பொன்சேக்கா மோசடி செய்தார் என குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேக்கா இராணுவ டென்டர் சபையின் தலைவராக இருந்தபோது, ஹைகோப் நிறுவனத்திற்கும், தனது மருமகனுக்கும் இடையிலிருந்த தொடர்புகளை வெளியிடவில்லை எனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது சிறையில் அடைக்கக் கூடிய வகையில் பாரிய தவறா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment