Tuesday, September 21, 2010

மலேசியாவில் வீட்டுப்பணிப் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது.

கோலாலம்பூர் மலேசியாவில் வேலை செய்த இந்தோனீசிய பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதன் தொடர்பில் மலேசியப் போலிசார் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பினாங்கிலுள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 26 வயதான இந்தோனீசிய பணிப்பெண் வின் ஃபெய்டா மீது வெந்நீரை ஊற்றியும் சூடான இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டும் அவரின் முதலாளிகள் கொடுமைப்படுத்தியதாக மலேசியப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அந்த பணிப்பெண்ணை அந்த முதலாளி கற்பழித்ததாகவும் கூறப் படுகிறது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, சாலையோரத்தில் விட்டுச் சென்றனர் அந்த முதலாளிகள்.

பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இது குறித்து போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டதையடுத்து மலேசிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

அந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பில் 41 வயதான குத்தகையாளர் ஒருவரையும் அவரின் மனைவியையும் கைது செய்திருப்பதாக பினாங்கு போலிசார் கூறினர்.

பணிப்பெண்ணை சித்ர வதை செய்ததான குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்குவதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மலேசியப் போலிசார் கூறினர்.

அந்த பணிப் பெண் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறப்பட்டது. பணிப்பெண் தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலிசார் கூறினர்.

மலேசியாவுக்கு பல்வேறு நாடு களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்காக செல்கின்றனர். அவர்கள் அங்கு, வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

அவர்களை முதலாளிகள் மோசமான முறையில் நடத்துவ தாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com