Monday, September 6, 2010

ஜனாதிபதி - இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு.

ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவத் தளபதி வி.கே சிங், இன்று அலறி மாளிகையில் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வை சந்தித்துள்ளார். நேற்று இந்திய தளபதி வந்தடைந்தபோது இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா அவர்களால் வரவேற்கப்பட்டு பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் ஆரப்பிக்கவென தனது மனைவியுடன் வந்துள்ள அவருக்கு இன்று இராணுவத் தலைமையகத்தில் பாரிய இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கை இந்திய இராணுவகூட்டுவிவகாரங்கள் தொடர்பாக அவர் இலங்கையில் தங்கியிருக்கும் 5 நாட்களுள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து பேசுவார் என தெரியவருகின்றது.

வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய ஹஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, ஹயுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார். மேற்படி போரில் உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், வி.கே.சிங் இன்று மலரஞ்சலி செலுத்துகிறார். அந்த நினைவிடம் எழுப்பப்பட்ட பிறகு, அங்கு செல்லும் முதலாவது இந்திய ராணுவ தளபதி இவரே. அத்துடன் இவர் வவுனியா பிரதேசத்தில் பல இடங்களுக்கும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

ராணுவ தளபதி வி.கே.சிங்கை தொடர்ந்து, இந்திய விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை வரவுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய இராணுவத் தளபதியின் இலங்கை வருகை இந்தியாவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் இலங்கையில் அமைக்க சீனா முயன்று வருவதாகவும் அதற்கான விடயங்கைள இலங்கை அரசு சீனாவிடம் பேசிச்கொண்டு இந்தியாவுடனும் தனது நட்பை பேணுவதாக இந்திய பத்திரிகை ஒன்று குற்றஞ்சுமத்துகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com