Monday, September 20, 2010

சென்னையில் போலி கடனட்டை கும்பல் கைது. இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

சென்னையில் ஐந்தாண்டு காலமாக போலி கடன் அட்டைகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த 13 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. தப்பியோட முயன்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அனைத்துலக அளவில் செயல் பட்டு வந்த இந்தக் கும்பலின் தலைமை அலுவலகம் மலேசியாவில் அக்பர் என்கிற அப்துல் என்பவரின் தலைமையில் செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

கடன் அட்டை தயாரிக்கும் எந்திரங்களை சீனாவில் வாங்கி மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் அப்துல்லா சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். 80 விழுக்காடு போலி கடன் அட்டைகளை புதுக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும் இலங் கையைச் சேர்ந்த உமேஸ் என்ப வருமே தயாரித்து வந்துள்ளனர்.

இந்தக் கும்பல் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் பெரிய அளவில் போலி கடன் அட்டைகள் மூலம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள்.

இந்தக் கும்பலில் இலங் கையைச் சேர்ந்த ஜாட்டி என்கிற உமேஷ், மனோஜ் குமார் ஆகியோர் மட்டுமே அதிக அளவில் போலிக் கடன் அட்டைகளைத் தயாரித்து விநியோகித்து வந்ததாகக் கூறப் படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த உமேஷ் என்பவரும் அவரது கூட்டாளிகள் வினோத்குமார், நிமல்ராஜ், அருண் குமார், எழிலரசன், அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மனோஜ் என்பவர் மட்டும் காவல் துறையிடம் சிக்காமல் இருந்தார். அவரைக் கைது செய்வதற்காக தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறை நேற்று முன்தினம் பள்ளிக்கரணை நாராயண நகர் என்னுமிடத்தில் கைது செய்தது.

அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், கணினிகள், நவீன அச்சு இயந்திரங்கள் போன்ற அனைத்து வசதிகளுடனும் கடன் அட்டை தயாரிக்கும் ஒரு தொழிற் சாலையைப் போல காட்சி தந்ததாகக் கூறுகின்றனர் காவல் துறையினர். அந்த எந்திரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டன. மனோஜ்குமார் புதுக் கோட்டையை சேர்ந்தவர். பி.பி.ஏ. பட்டதாரி. கணினி பட்டயக் கல்விச் சான்றிதழ் பெற்றவர்.

மும்பையில் சில காலம் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் போலி கடன் அட்டை தயாரிக்கும் கும்பலோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com