Friday, September 10, 2010

நாட்டை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பு தேவை.

ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இஸ்லாமிய கலண்டரில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

புனித அல்குர்ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாதகாலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும்.

இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமயங்கள், இனங்களைச் சேர்ந்த சகோதரர்களோடு மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரச்சினையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினது பெறுமதியான பங்களிப்புகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என நான் நம்புகின்றேன்.

நாடெங்கிலும் வாழும் எல்லா முஸ்லிம்களும் இந்த பெருநாளை மிகவும் சந்தோசத்தோடு கொண்டாடும் வகையில் நாட்டில் இன்று அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதப் பிரச்சினைகளால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இது அவர்கள் தங்களது பாரம்பரிய, சமய நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது.

இந்த விசேட சந்தர்ப்பத்தில் ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கரமான எனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com