காஷ்மீர் எல்லையில் சீனத்துருப்புக்கள் குவிக்கப்படுவதாக இந்தியா பரபரப்பு.
ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய நாடுகளான சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடைப்பட்ட உறவில் மேலும் ஒரு பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. இந்திய வசமுள்ள காஷ்மீரில் வன்செயல்கள் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரிக்கும் நிலையில், அருகே பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் சீனத் துருப்புகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் சீனா தலையிடாது என்று பெய்ஜிங் அறிவித்ததற்கு ஓரிரு நாட்கள் கழித்து இந்தத் துருப்புச் செய்து பிரச்சினையாகியிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சீனா படைகளைக் குவித்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்தியா கவலையையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இந்தியாவின் கவலையையும் ஆட்சேபத்தையும் சீனாவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஷாங்கிடம் தெரிவித்தார். இது சீனா-இந்தியா இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் திட்டத்தில் வெளியிடப்படுபவை என சீனா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
கில்ஜித் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப் பட்டுள்ளதாக வெளியான செய்திகள் ஆதாரமில்லாதவை. கற்பனை கலந்து இத்தகைய செய்திகளை பரப்பும் விஷம சக்திகளின் நோக்கம் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான உறவை சீர்குலைப்பதாகும். ஆனால் இந்த திட்டம் பலிக்காது என்றும் அந்நாடு ஏற்கெனவே உறுதியாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சீனாவின் மனிதாபிமானக் குழுவினரே உதவி வருகின்றனர் என்றும் அந்நாடு கூறியுள்ளது.
சுமார் 11 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது எனவும் அவர்களை சாலை அமைக்கவும் ரயில் பாதை பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 28 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
0 comments :
Post a Comment