Friday, September 24, 2010

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கு உரிய ஏற்பாடு அவசியம். பிரதமர் ஜயரட்ன

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :-

பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் பாதுகாப்பு நிலமை உயர் நிலைமையில் இருப்பதை சர்வதேச மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது. எமக்கு கிடைக்கப் பெற்று வருகின்ற பாராட்டுக்களை நாம் தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இத்திட்டங்களை இன, மத, பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் பயனாக அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை அடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உலகில் மக்கள் திருப்தியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடத்தில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தனால் பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் உறுதியான பாதுகாப்பு வேலை திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு கடற்படையைப் புனரமைப்பது மிகவும் அவசியமான காரணமாகும். யுத்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பிரதான பாதுகாப்பு துறையே கடற்படையாகும்.

ஏனெனில் இது கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனால் நாட்டைப் பாதுகாக்கும் வேலியே கடற்படையேயாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்து சேருவதை கடற்படையினரால் தான் கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதையும், வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதையும் தவிர்ப்பதற்கும், கடல் வலயங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பதற்கும் உல்லாச பயணத் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும். கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் கடற் படையை வலுப்படுத்துவது அவசியம்.

அதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டினதும் கரையோரங்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரின் முகாம்கள் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது எதிர்கால பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பாராட்டத்தக்க வேலைத் திட்டமாகும்.

இதேவேளை சரணடைந்துள்ள மற்றும் இனம் காணப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை புலன் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டு சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் ஏற்கனவே மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இராத போதிலும் அவை இப்போது மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் தெரியவருகின்றது. அதனால் தொடர்ந்தும் விழிப்பாக இருப்பது அவசியம்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பயங்கரவாத சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதனோடு சேர்த்து அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. இதனூடாக அப்பகுதி மக்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com