Thursday, September 9, 2010

துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்.

குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்.

வீரகேசரி செய்திப்பிரிவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தொலைநகல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 1998- 09- 09 அன்று வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் நான்.

இராணுவத்தால் 18 வயதில் கைது செய்யப்பட்டு கடந்த 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றேன். இன்று எனது குடும்பத்தைப் பராமரிக்க முடியாமல் அவர்களையும் துயரத்தில் ஆழ்த்தும் பரிதாப நிலையில் நிற்கின்றேன்.

குடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கு சொல்ல முடியாத ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியற்ற அநாதையாக வாடுகின்றேன். என்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றங்களில் 2008 - 07- 11 அன்று ஒரு வழக்கு தீர்த்து வைக்கபட்டது. இன்னும் மூன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடக்கின்றன.

அடுத்தவரிடம் கையேந்தும் நிலை.

வழக்கு விசாரணைக்கென வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு பண்ணக்கூட என்னிடம் காசு இல்லை. உதவிக்கு யாருமற்ற அநாதையாக தவிக்கின்றேன். எனது சொந்த தேவைக்குகூட ஒரு சோப் கட்டி வாங்கக் கூட அடுத்தவரிடம் கையேந்தும் நிலைமை.

எனது நிலைமை யாருக்கும் வரக்கூடது. ஒரு யாசகனுக்கு கூட இந்த நிலை வந்திருக்காது. துன்பத் தீயில் துவளும் என் கண்ணீரைத் துடைக்க எவராவது உதவிக்கரங்கள் நீட்ட மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்றேன்.

நான் எனது பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வாழ வழிசமைக்க எவரும் முன்வர மாட்டார்களா? என்னைத் தங்கள் உறவாக நினைத்து உதவி புரிய எவரும் இல்லையா? வெளி உலகத்தைப் பார்க்க, எல்லோரையும் போல நானும் வாழ எவரும் உதவக் கூடாதா?

எனது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுமானால் என் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் என்றே நான் நம்புகின்றேன்.

எனக்கு 2 சகோதரிகளும் 1 சகோதரனும் இருக்கின்றார்கள். அண்ணாவும் அக்காவும் திருமணம் முடித்துச் சென்று விட்டார்கள். அப்பா வயதானவர், நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார்.

எனது தங்கை திருமணம் முடிக்கவில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். குடும்ப கஷ்டம் காரணமாக கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வந்த நான், இன்று இப்படியொரு அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

முகம் தெரியாத வெளிநாட்டு உறவுகளே எனக்கு வழி காட்ட வேண்டும்.

இதுவரை யாரிடமும், எந்த உதவியும் நான் கேட்டதில்லை. இன்று உங்களை நம்பி, என் உறவாக எண்ணி, என் துன்பத்தில் பங்கு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் எனது மனச்சுமையினை இறக்கி வைத்துள்ளேன்.

எவராவது எனக்கு உதவ முன்வந்தால் அந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டேன் என்று கூறி உங்களை நம்பி எனது கண்ணீர் மடலை முடிக்கின்றேன்."

இவ்வாறு அந்த மடலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இக்கடிதத்தினை வாசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் , லீவு நாட்களில் பியர் அடித்தபின் இச்சோக கதையினை உங்களுக்கு பைட்டுக்கு எடுத்துக்கொண்டு ஏதோ தமிழ் மக்கள்படும் துயரத்தில் சோகப்படுவதாக பிதட்டிக்கொள்ளாமல், முடிந்தால் ஒருவர் இருவர் சேர்ந்தாவது இலங்கையிலுள்ள வக்கீல் ஒருவருடாக குறிப்பிட்ட இளைஞனுக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இலங்கைநெற் ஆசிரியர்குழு


No comments:

Post a Comment