Monday, September 6, 2010

இந்நிலை தொடர்ந்தால் மீண்டுமோர் ஆயுதக்குழு உருவாகும் நாள் வெகு தொலைவிலில்லை.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ள உத்தேசமாகியுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் லால் அவர்கள் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத போக்கினை நாட்டு மக்களும் இளம் சமூதத்தினரும் உணர்ந்துவருவதாகவும், இவ் ஜனநாயக விரோத போக்கு தொடருமானால் அது மீண்டுமோர் ஆயுத யுகத்திற்கு இந்நாட்டில் வழிசமைத்துவிடும் என எச்சரித்துள்ளார்.

இந்நாடு ஜனநாயக விரோத முறையில் ஆளப்படுகின்றபோது, யாரால் சுதந்திரமாக பேச முடியும்? ஊடகங்கள் சுதந்திரமாக எழுத முடியுமா? அவர்கள் அவ்வாறு எழுதினால் மறுநாள் என்ன நடக்கும்? இன்று பிரகீத் எக்நெலியகொடவைப் பற்றி யார் பேசுகின்றார்கள்? நாடு ஆளப்படும் நிலையில் இந்நிலைமைகள் குறித்து நாம் யார் மீதும் குற்றஞ்சுமத்த முடியாது. இது மிகவும் பயங்கரமான நிலைமை. எனவே எதிர்வரும் அரசியல் யாப்பு மாற்றத்தினை நாம் அனைவரும் எதிர்க்கவேண்டும். ஆட்சியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது என்ன நடக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. அதை நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றீர்கள். தேர்தலின்போது அரச சொத்துக்கள் யாவும் ஆட்சியிலுள்ளவரின் தேர்தல் பிரச்சாராத்திற்காக பயன்படுத்தப்படும், அதிகாரிகள் விரும்பியோ விரும்பாமலோ அவரை ஆதரிக்கவேண்டும், அரச ஊடகங்கள் அரசாங்கம் சார்பாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும், தேர்தல் திணைக்களம் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment