இலங்கைத் தீவின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்பது வெளிப்படையான, அரசியல் சர்ச்சைகளுக்கு உட்படாத கூற்று. தேசிய இனப் பிரச்சனைக்கான சமூக அடித்தளம் என்பதே அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பிற்கான பிரதான காரணமாகவும் அமைக்கிறது.
ஆனல் முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யப்பட்டு அது தனது இயல்பான வளர்ச்சியைக் கண்டிராத இலங்கை போன்ற நாடுகளின் தேசிய இனங்கள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வளர்ச்சியடைந்த தேசிய இனங்களுடன் ஒப்பிட முடியாத வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது.
ஐரோப்பிய தேசிய இனங்கள் உறுதியான தேசிய முதலாத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது. வளர்ச்சி நிலையிலிருந்த போல்கன் நாடுகளின் தேசிய இனங்கள் மத்தியில் கூட தமது தேசியப் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்ட தேசிய முதலாளித்துவ வர்க்கம் உறுதியானதாகக் காணப்பட்டது.
ஐரோப்பியத் தேசிய இனங்களதும் தேசங்களினதும் வளர்ச்சிப் போக்குக் குறித்த ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் எம் முன்னால் பரந்து கிடக்கின்றது. லெனின், ஸ்டாலின், கெல்னர் போன்ற பல அறிஞர்களின் முதலாளித்துவப் பொருளாதார காலத்திற்குரிய குறிப்பான மக்கள் கூட்டமான தேசிய இனங்கள் குறித்த ஆய்வுகள் நீண்ட கற்கைகளை எம் முன்னால் விட்டுச் சென்றுள்ளனர். பெனடிக்ட் அன்டர்சன் போன்ற ஆய்வாளர்கள் தேசிய இனங்களின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிப் போக்குக் குறித்தும் அதற்கான புறநிலை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
ஐரோப்பிய மூலதனம் விரிவடைந்தது ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த காலத்தில் ஐரோப்பிய தேசங்களும் அவற்றின் தேசிய இனங்களும் தமது தேசியப் பண்பை இழந்து போயின. மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டு அவற்றால் தமது நலன்களுக்காகப் பாதுகாக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்களும் குறைநிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்களாகவே காணப்பட்டன.
இவ்வளர்ச்சியற்ற தன்மையின் மிகப்பிரதான சமூகக் கூறாக தரகு முதலாளித்துவ வர்க்கம் காணப்பட்டது. முரண்பட்ட இரண்டு பிரதான வர்க்கங்களாக உற்பத்தியின் அடிநிலையிலிருக்கும் வறிய விவசாய வர்க்கமும் இதனோடு கூட சிறு தொகையான தொழிலாளர்களும் மறு புறத்தில் தரகு முதலாளிய வர்க்கமும் என்ற வகையில் சமூகம் பிளவுண்டிருந்தது.
இதன் பிரதியாக்கம் ஒவ்வொரு தேசங்களிலும் வளர்ச்சி நிலையிலிருந்த தேசிய இனங்களிலும் காணப்பட்டன. இதன் இடையே மத்திய தரவர்க்கத்தின் கீழணிகள், மத்தியதர வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் என்று ஒரு வகையான புதிய கலவையாக சமூகம் மாற்றமடைந்தது. மூன்றாமுலக நாடுகள் பல வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்களின் கூட்டமைப்பாகின.
வளர்ச்சி இடை நிறுத்தப்பட்ட தேசங்களாக நாடுகளுள் புதைந்திருந்த தேசங்கள் உருவாகின. இத்தேசங்கள் இரண்டு வகையான ஒடுக்கு முறைகளை எதிர் நோக்கின. ஒரு புறத்தில் ஏகாதிபத்திய பொருளாதார ஆக்கிரமிப்ப்பும் மறு புறத்தில் பெருந்தேசிய அரசுகளின் ஒடுக்கு முறையும் என்ற இருவழித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்கள் எதிர்கொண்டன.
ஒடுக்கப்படும் தேசங்கள் தனியரசு அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் தேவையானதும் முற்போக்கனதுமாகும். எது எவ்வாறாயினும் தேசியத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படாவிட்டால் அது தேசிய அரசை அமைப்பதற்கான போராட்டமாக அமைய முடியாது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்ற வகையில் தரகு
முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகவும், தேசிய அரசுகளின் உள்ளமைந்த தரகு முதலாளியச் சிந்தனைக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும்.
மத்தியதர வர்க்கம் எப்போதும் பலமடைந்த தரகு முதலாளிகளை ஆதரிக்கும் அல்லது அவர்களை நோக்கி நகரும் சிந்தனைப் போக்கினையே கொண்டிருக்கும் என்பது வெளிப்படையான ஒன்று. ஆக மத்தியதர வர்க்கமும் அதன் மேலணிகளையும் தளமாமக முன்வைத்து தேசிய விடுதலைக்கானதும் தேசங்களின் விடுதலைக்கானதுமான போராட்டங்கள் உருவாக முடியாது. அவ்வாறு உருவாகுமானால் அதன் வளர்ச்சி என்பது தேசங்களின் தன்னாட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய முழக்கங்களூடாகத் தலைமை போரட்டமாகவே மாற்றாமடையும்.
இந்த அடிப்படையில் தோல்வியில் முடிவடைந்த போராத்திற்கான முன்னுதாரணத்தை முள்ளிவாய்க்காலில் புலிகள் விட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள், இந்திய அரசு, அவற்றின் லொபிகள் அனைத்துமே வீரம் செறிந்த மக்களின் உணர்வுகளைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கியுள்ளன.
இதே சிந்தனை முறையின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. தவிர, தேசிய விடுதலைக்கான சமூக இயங்கு தளத்தின் முன்னணி சக்திகளாக இலங்கையில் தம்மைக் கட்டமைத்துக் கொள்ள முனைகின்றவர்கள் கூட இந்த யதார்த்ததைப் புரிந்துகொண்டு மாற்று அரசியலை முன்வைக்கத் தயாரற்ற நிலையிலேயே தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.
நமது தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கின்ற பாடத்தின் முதல் அத்தியாயம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படலாம். தன்னுரிமைக்கான போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் மூலோபாயத்தின் முக்கிய பகுதி இந்த வர்க்கமுரணைப் புரிந்துகொள்வதிலிருந்து தான் ஆரம்பிக்கப்பட முடியும்.
No comments:
Post a Comment