Thursday, September 16, 2010

பசில் தலைமையில் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்.

இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் நடைபெற்ற முக்கிய உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதற் தடவையாக நேற்று கலந்து கொண்டார்கள்.

அரச அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்க வேண்டும் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே தாங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூட்டமைப்பின் யாழ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தகைய கூட்டங்களில் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தின் காங்கேசன்துறையின் மேற்குப் பகுதி, கட்டுவன், கீரிமலை, தொண்டமனாறு ஆகிய பகுதிகளில் அடுத்த வாரம், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என நேற்றைய தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ்.சரவணபவன், எஸ்.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com