Thursday, September 9, 2010

லாரி புகுந்து வெடித்தது பஸ்

தமிழ்நாட்டில் வேகமாகச் சென்று கொண்டு இருந்த ஒரு பஸ்சுடன் லாரி மோதி பஸ் வெடித்ததில் ஒன்பது பேர் தீயில் வெந்து மாண்டனர். பஸ்ஸில் இருந்த எஞ்சிய 31 பேரும் காயம் அடைந்து மருத்துவ மனையில் கிடக்கிறார்கள். இந்தச் சம்பவம், திருவண்ணாமலை அருகே நேற்றுக்காலை நேரத்தில் நிகழ்ந்தது.

வேலூரில் இருந்து கடலூருக்கு சென்றுகொண்டு இருந்த அரசு பஸ் எரிந்து எலும்புக்கூடாகிவிட்டது. அந்தப் பஸ், மல்லவாடி என்ற பேரூருக்கு அருகே திடீர்க்குப்பம் கிராமத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிரே அரிசி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீர் என்று லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. லாரி பஸ்ஸின் முன் பக்கத்தை பிளந்துகொண்டு உள்ளே புகுந்தது.

மோதிய வேகத்தில் பஸ்ஸின் டீசல் தொட்டி வெடித்தது. இதன் விளைவாகத் தீ பஸ்சுக்குள் மளமள வென்று பரவியது. பஸ்ஸில் முன் பக்கம் அமர்ந்து இருந்த பஸ் ஓட்டுநர் நடத்துநர் உள்ளிட்ட 9 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பஸ் பின்பக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்து ஜன்னல் வழியாக பயணிகளை வெளியே இழுத்துக் காப்பாற்றினர். 31 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு திரு வண்ணாமலை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து பஸ்-லாரி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசம் ஆகியது. பஸ்சுக்குள் 9 பேர் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் இருந்தது.

சாலை விபத்துகளில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் சாலை விபத்து நிகழாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment