Sunday, September 5, 2010

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்

கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்", எனவும் புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்" என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா" என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்" என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு" என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு "அருளாளர் பட்டம்" அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் - டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்"ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது "சின்னவள் நீ, பக்குவமற்றவள்" என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று, இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்" எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு"வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும், நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை - எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்" என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது, சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான "நேரு" விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா" விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்' விருது

1979-ல் நோபல் பரிசு
அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் "இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்" என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், "உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர். அதற்கு அவர், "வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்" என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."

1980-ல், மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா" விருது

1981-ல், ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி ஹொனர்" (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல், ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்" விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்" விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி" விருது மற்றும் “பாரத சிரோமணி" விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்" விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது" மற்றும் “தயாவதி மோடி" அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை' விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல், அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்" வழங்கியது.

2003-ல், அக்டோபர் 19ம்திகதி "அருளாளர் பட்டம்" திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

No comments:

Post a Comment