Saturday, September 4, 2010

நாட்டை ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்கின்றார். கட்சியினர் அதிருப்தி.

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றத்தினூடாக நாட்டினை ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சி முறைக்கு இட்டுச் செல்வதாக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் , தொடர்ந்து பேசுகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனமாக மகிந்த சிந்தனை யின் இதிர தெக்கம என்பதோர் தொகுப்பு வைக்கப்பட்டதாகவும் அத்தொகுப்பில் எந்தவோர் இடத்திலும் இவ் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக தெரிவித்திருக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தெரிவித்திருந்தால் மக்கள் அதற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் இருதடவைகளே ஆட்சி செய்ய முடியும் என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவரும் மகிந்தவின் முடிவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில்கூட ஆதரவு இல்லை எனவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இம்முடிவுக்கு இணங்குவதாக தெரிவிக்கின்றபோதும் , மனப்பூர்வமான ஆதரவை அவர்கள் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்களை அழைத்து , சுற்றிவர அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகைள சுற்றிவர நிறுத்தி கைகளை உயர்த்துங்கள் என தெரிவித்து மகிந்த அவர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டுள்ளார். அவ்வாறு உயர்த்தியபோது பிடிக்கப்பட்டுள்ள படங்களில் பலர் எவ்வித விருப்பமும் இன்றி கட்டாயத்தின்பேரில் கைகளை உயர்த்துவதை படங்களில் நன்றாக காணமுடிகின்றது. அதற்கு உதாரணமாக முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவின் கையினை பாருங்கள் அவரது கை பாதி உயரத்துக்கு கூட உயரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.



No comments:

Post a Comment