Wednesday, September 1, 2010

கர்நாடகாவில் தற்கொலைக்கு அனுமதி கேட்ட 70 வயது பெண்:

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கரிபசம்மா (70). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு கோரி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். கரிபசம்மா கூறியுள்ளதாவது....

முதுமை பருவத்தில் இருக்கும் என்னை ஆதரிக்கவோ, அன்பு செலுத்தவோ வாரிசும் இல்லை உறவுகளும் இல்லை. என் இடுப்பில் உள்ள டிஸ்க் பகுதி விலகியிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாமல் அவதிப்படுகிறேன். இதுமட்டுமின்றி மூட்டு வலியும் உள்ளது. மேலும், நான் ஒரு நீரிழிவு நோயாளி.

இதனால் ஒவ்வொரு நாளும் நரக வேதனை அனுபவிக்கிறேன். இந்த வேதனையை தாங்க முடியாத நான் ஒரேடியாக இறந்துவிட முடிவு செய்துள்ளேன். நான் மரணத்தை மகிழச்சியுடன் வரவேற்கிறேன். எனவே நான் இறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்று எனக்குத் தெரியும். நான் சட்டத்தை மதிப்பவள். எனவே நான் இறப்பதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும். விஷ ஊசி போட்டால் உயிரை விடத் தயாராக உள்ளேன்.

நான் வாழ விரும்பவில்லை. எனக்கு உதவ பலர் முன்வருகின்றனர். யார் உதவினாலும் என் வலியை நான் தான் தாங்கியாக வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே, நான் இறப்பதற்கு அனுமதி அளியுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி நோயை குணப்படுத்த முடியுமா? என்று மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஏற்கனவே, கரிபசம்மா இறப்பதற்கு அனுமதி கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு எந்த பதிலும் வராததால் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

No comments:

Post a Comment