Saturday, September 18, 2010

போப்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய 5 பேர் லண்டனில் கைது.

போப்பாண்டவரைக் கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த ஐந்து பேரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். லண்டன் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். போப்பாண்டவர் நான்கு நாள் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரைத் தாக்கி கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர்.

மத்திய லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் வடக்கு, கிழக்கு லண்டனில் உள்ள சில வீடுகளை போலீஸார் ரெய்டுநடத்தியபோது இந்த ஐந்து பேரும் சிக்கினர். அவர்கள் யார், என்ன மாதிரியான திட்டத்துடன் இருந்தனர் என்பது தெரியவில்லை.

இவர்களுக்கு 26 முதல் 50 வயது வரைக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போப்பாண்டவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அவை திருப்திகரமாக இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு லண்டனில் ஒரு பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களை தீவிரவாதிகள் தாக்கினர். நான்கு இங்கிலாந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com