Thursday, September 9, 2010

விமானி தூங்கியதாலேயே, விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் உயிரிழக்க நேரிட்டது.

158 பேரை பலிகொண்ட மங்களூர் விமான விபத்துக்கு விமானி தூங்கியதே காரணம் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதம் 28-ந் தேதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 152 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான பணியாளர்களும் பலியானார்கள்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிவான தகவல்கள் பற்றிய முதல் கட்ட அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி, விபத்து நடப்பதற்கு முன்பு 1 மணி 50 நிமிடம் தூங்கினார் என்ற தகவல் கருப்பு பெட்டியில் பதிவான உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். சிலாட்கோ குலுகியா (55) என்ற விமானி ஓட்டி வந்தார்.

2 ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்ற இவர் விமானம் பறக்கும் போதே இருக்கையில் இருந்து சுமார் 2 மணி நேரம் தூங்கி இருக்கிறார். கட்டுப்பாட்டு அறை உரையாடலின் போது 110 நிமிடங்கள் இவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது.

விபத்து நடப்பதற்கு முன்பு விமானம் வழக்கமாக பறக்கும் 2 ஆயிரம் அடி உயரத்துக்கும் பதிலாக 4 ஆயிரத்து 400 அடி உயரத்தில் பறந்துள்ளது. மேலும் மங்களூர், விமான நிலையத்தில் குறிப்பிட்ட தூரத்தில் இறங்காமல் குறுகிய தூரத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விமானி திடீர் என்று கண் விழித்து, மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கியதால் தூக்க கலக்கத்தில் சரியான தூரத்தை கணிக்க தவறி விட்டார். இதனால் விமானம் நீண்ட தூரம் ஓடி நிற்க முடியாமல் வேகமாக சென்று காம்பவுண்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானி விழிப்பாக இருந்து சரியாக செயல் பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான விபத்து பற்றிய முழு விவரம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment