பூகோளமயமாக்கலும், அதன் விளைவுகளும்: The Red Tail (By Joanne Laurier)
டௌன் மெக்கெல்சனும், மெலிசா கோச்சும் இணைந்து இயக்கியிருக்கும் The Red Tail ஆவணப்படம் மிக முக்கியமான ஒரு பிரச்சினையைக் கையாண்டிருக்கிறது: அதாவது, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் விளைவுகளையும், இந்த புதிய நிலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க செய்யும் முயற்சிகளையும் கையாண்டுள்ளது.
ஆகஸ்ட் 2005இல், ஒருபெரும் சம்பளக்குறைப்பு மற்றும் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைப்பு போன்ற நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு எதிராக சுமார் 4,400 நோர்த்வெஸ்ட் ஏர்லைன் இயந்திர வல்லுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
இறுதியில், 444 நாட்கள் மோதலுக்குப் பின்னர் Aircraft Mechanics Fraternal Association என்ற சுயாதீன அமைப்பின் (AMFA) உறுப்பினர்களான 4,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்தார்கள். நோர்த்வெஸ்ட்டில் இருந்த விமானிகளுக்கும், இயந்திர வல்லுனர்களுக்கும், விமான உதவியாளர்களுக்கும் தலைமைதாங்கி வந்த AFL-CIOவுடன் இணைந்த இரண்டு தொழிற்சங்கங்களும், மற்றொரு சுயாதீனமான தொழிற்சங்கமும், முறையே, தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் மிக அடிப்படையான கொள்கைகளை புறக்கணித்துவிட்டு, அவற்றின் உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தை உடைத்துக்கொண்டு செல்ல உத்தரவிட்டன. அதேநேரம், அமெரிக்க தொழிற்சங்க அமைப்பான “Change to Win” பிரிவைச் சேர்ந்த The Teamsters, விமானச்சேவை நிறுவனத்திற்கு வினியோகங்களை நிறுத்த மறுத்துவிட்டது.
தம்முடைய குடும்பத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்த அந்த மோதலை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயந்திர வல்லுனர் ஒருவரின் மகள் மெலிசா கோச் படமாக்கத் தொடங்கினார். மினியாபோலிஸ் போராட்டக் களத்தில், அவர் திரைப்பட தயாரிப்பாளர் டௌன் மெக்கல்சனுடன் இணைந்து கொண்டார். வேலை நிறுத்தத்தை உடைத்துக்கொண்டு செல்வதற்கு மாறாக வேலையை இராஜினாமா செய்திருந்த ஒரு NWA விமான ஊழியர் பெத் வெல்சன், அவர்களை ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், அவ்விரு தயாரிப்பாளர்களும் போராட்டத்தை படமெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
இறுதியாக மெக்கல்சனும், கோச்சும் The Red Tail தயாரிப்பிலும் இணைந்தார்கள். இப்படம், நோர்த்வெஸ்ட்டில் நடந்த கசப்பான போராட்டத்தின் பதிவு ஆவணமாக தொடங்குகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மெலிசாவின் தந்தை ரோய் கோச், முதலில் ஹாங்காங்கிற்கும், பின்னர் சீனாவிற்கும் நாடுகடந்து வெளியகற்றுப்பட்டுவிட்ட அவருடைய வேலையைப் பெற புறப்படுவதிலிருந்து, படம் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறது.
ஓர் அமெரிக்கரும், அவருடைய குடும்பமும் ஆசியாவில் அவர்களைப்போன்று இருப்பவர்களை தேடுவதைப் பற்றியும், அந்த சமயங்களில், அவர்கள் உலகளாவிய முதலாளித்துவத்தின் கொடூரமான உண்மைகளை முகங்கொடுப்பதைச் சுற்றியும் இப்படத்தின் கதை மிக சுவாரசியமாக நகர்ந்து செல்கிறது. இந்த படத்தை எடுத்து கொண்டிருக்கும் போதே, எல்லா நாடுகளின் உழைக்கும் மக்களும் சர்வதேச அளவில் ஒரேமாதிரியான ஒரு அலகை உருவாக்கியுள்ளார்கள் என்ற உண்மையை ரோயும், மெலிசாவும் உணர்கிறார்கள்.
AFL-CIO வினுள் சேர்ந்துள்ள ஓர் அமைப்பான International Association of Machinist (IAM) இல் இருந்து விலகி AMFA இல் சேர்வது என்ற நோர்த்வெஸ்ட் இயந்திர வல்லுனனர்களின் 1997-98 ஆண்டு தீர்மானத்தையும் The Red Tail தொட்டுக்காட்டுகிறது. எவ்வாறிருப்பினும், 2005ஆம் ஆண்டு நோர்த்வெஸ்ட் போராட்டத்திற்கு எதிராக AFL-CIO மற்றும் பிற தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு போராட்டத்தைக் கைவிட்டு வேலையில் ஈடுபட்டதானது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கைக்குச் சிறிதும் குறைவானதில்லை. சம்பள குறைப்பு மற்றும் சலுகைகளுக்கு எதிராக ஒரு போராட்டமாக வெடிக்கக்கூடிய தொழிலாளர்களின் எவ்வித நடவடிக்கைக்கும் தொழிற்சங்க அதிகாரத்தின் வெறித்தனமான விரோதப்போக்கின் ஒரு வெளிப்பாடாக அது இருந்தது.
இயந்திர வல்லுனர்களின் போராட்டமானது, புஷ் நிர்வாகம் மற்றும் ஊடகத்தின் உதவியுடன், ஒருபெரிய நிறுவனத்தின் மற்றும் தொழிலாளர் இயக்கம் என்றழைப்பட்டதன் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தோல்வியில் முடிந்தது.
நோர்த்வெஸ்ட் அதன் இயந்திர வல்லுனர்களை நசுக்குவதை, ஆட்குறைப்பு மற்றும் செலவு-குறைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஒட்டுமொத்த திட்டத்தின் ஓர் உட்பாகமாக கண்டது. அந்த நடவடிக்கை இன்றுவரை நிறுத்தப்படாமல் தான் இருக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 2006இல், உலக சோசலிச வலைத்தளம் அப்போதே குறிப்பிட்டதைப் போல, விரைவில் குறைக்கப்படவிருக்கும் பணியாளர்கள் அவர்களின் வேலையற்ற நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து கையேடு ஒன்றை ஏர்லைன் அனுப்பியது. சிக்கனமாக இருப்பது, “குப்பையில் கிடந்தாலும், விரும்பினால் அதையும் எடுக்க வெட்கப்படக்கூடாது” என்பது போன்ற குறிப்புகளை அப்புத்தகம் கொண்டிருந்தது. அந்த ஏர்லைனின் தசாப்தங்களாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் இது அளிக்கப்பட்டது. விமானத்தில் பறக்கும் பயணிகளையும் வெறுமனே விட்டுவிடவில்லை. “சாதாரண அவசரநிலை தரையிறக்கம்” (normal emergency landing) என்ற வார்த்தையை நோர்த்வெஸ்ட் பயன்படுத்தியது. அவசரகால தரையிறக்கத்தைச் செயல்படுத்துவதற்கான சூழ்ச்சி தான் இது. போராட்டத்தின் போது இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
9/11க்கும் இயந்திர வல்லுனர்களின் வெளிநடப்பிற்கும் இடையில் ஏர்லைன் சுமார் 5,000 தொழிலாளர்களை வெளியேற்றி இருப்பதை The Red Tail குறிப்பிட்டுக் காட்டுகிறது. (போராட்டம் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பின்னர், 2001இல் இருந்து 3.5 பில்லியன் டாலர் இழப்புகள் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டு, நோர்த்வெஸ்ட் திவால்நிலையை அறிவித்தது. ஆனால் ஏர்லைனின் தலைவரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான டக்ளஸ் ஸ்டீன்லேண்ட் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டாலருக்கு நெருக்கமாக வருவாய் பெறுவதாக Forbes இதழின் ஏப்ரல் 2006 அறிக்கை குறிப்பிட்டு காட்டியது. ஏப்ரல் 2008இல், நோர்த்வெஸ்ட்டை உலகின் மிகப்பெரிய ஏர்லைனாக உருவாக்கக்கூடிய ஓர் உடன்பாட்டில் இணைவதற்கான தங்களின் விருப்பத்தை டெல்டாவின் மற்றும் நோர்த்வெஸ்ட்டின் செயற்குழு உறுப்பினர்கள் அறிவித்தார்கள்.)
ஆவணப்படத்தின் கதையில் பல அசாதாரண மற்றும் தவிர்க்கமுடியாத விஷயங்கள், இயந்திர வல்லுனர்களின் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னர் எடுத்துக்காட்டப்படுகின்றன.
“ரோயின் வேலையை எடுத்துக்கொண்ட தொழிலாளியைச் சந்திக்க” கோச்சின் குடும்பம், ஆகஸ்ட் 2007இல், ஹாங்காங்கிற்குப் பயணிக்கிறது. இந்த இடத்தில், 28 ஆண்டுகள் வேலை செய்து, அந்த வேலையை இழந்திருக்கும் 58 வயதான அவருடைய தந்தையை மெலிசா ஊக்கப்படுத்த முயற்சிக்கிறார். முழு ஓய்வூதிய நலன்களோடு இருந்திருக்க வேண்டிய ரோயின் வருமானம், இப்போது சமையல்காரராக வேலை செய்வதன் மூலம், அதன் மிக குறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது.
ஹாங்காங் சென்றடைந்த உடனேயே, ஹாங்காங் வரலாற்றின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றை நடத்தி கொண்டிருந்த இரும்பாலை தொழிலாளர்களுடன் ரோயும் கலந்து கொள்கிறார். ஒருவரின் வேலையைப் பிடிங்கி வேறொருவருக்கு அளிக்கும் முறைக்கான (scab) தம்முடைய மறுப்பு அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கான அவருடைய “மதிப்பார்ந்த திரும்பப்பெறல்” AMFA அட்டையை (“honorary withdrawal” AMFA card) ரோய் தொழிலாளர்களிடம் காட்டுகிறார்.
பாதிப்பிலிருந்து தம்மைக் காப்பாற்றி கொள்ள, ஹாங்காங் விமான பொறியியல் நிறுவனத்தில் (Hong Kong Aircraft Engineering Company - HAECO) அவருக்கு பதிலாக வேலையில் அமர்த்தப்பட்ட தொழிலாளியை புகைப்படக்கருவியில் பதிவாகாதபடிக்குச் சென்று பார்க்கிறார். நோர்த்வெஸ்ட், யுனைடெட் மற்றும் டெல்டா நிறுவனங்களுக்குப் பராமரிப்பு சேவையளிக்கும் முக்கிய பராமரிப்பு தளங்களில் HAECOவும் ஒன்றாகும். ஆனால், ஹாங்காங் இயந்திர வல்லுனரை ரோய் சந்தித்ததும், அவருடைய வேலை சீனாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியகற்றுப்பட்டுவிட்ட விபரத்தைத் தெரிந்து கொள்கிறார்.
ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், ரோயும் மெலிசாவும் மற்றொரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த முறை, மலிவுகூலி தொழிலாளர் சந்தைகளுக்குத் தங்களை நகர்த்தி கொண்டிருந்த, HAECOவின் சேய் நிறுவனமான TAECOவின் நிறைவேற்று அதிகாரிகளுடன் போராடுவதற்காக அவர்கள் சீனாவின் ஜியாமென்னிற்குச் செல்கிறார்கள்.
ஜியாமென்னில், TAECO அதன் பணியாளர்களைத் தங்க வைத்திருக்கும் வளாகத்திற்குள், காவலர்களுக்கு தெரியாமல் ரோயும், மெலிசாவும் மறைந்து செல்கிறார்கள். சீன தொழிலாளர்களின் முகங்களைக் காட்டாமல் இருப்பதில் படக்குழுவினர் மீண்டும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். “மஞ்சள் சங்கங்கள்” அரசாங்கத்தின் பாகமாக இருப்பதால், போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தன என்று ஆவணப்படம் விவரிக்கிறது. சீனாவில் ஏர்லைன் மெக்கானிக்குகள் உயர் தொழிற்திறன் பெற்றிருந்தாலும் கூட, சம்பளம் வெறுமனே மாதத்திற்கு 300 டாலர் மட்டும் தான்.
குடும்ப தேவைகளுக்காக ஒருவர் எவ்வாறு அங்கிருந்து நகராமல் இருக்க முடியும்? அதன்மூலம் அவர்கள் என்ன கண்டறிகிறார்கள்? ஹாங்காங்கிலும், சீனாவிலும் இருக்கும் தொழிலாளர்களும், இலாபத்திற்காக இரக்கமில்லாமல் பிழியும் தொழில்வழங்குனர்களின் முன்னால் ஓரளவிற்கு தரத்துடன் வாழ போராடிக் கொண்டு, தங்களைப் போலவே இருக்கிறார்கள் என்பதை அவர்கள் காண்கிறார்கள். தேசிய மற்றும் குறுகிய தடைகளை உடைத்தெறிந்து, தொழிலாளர்கள் நலன்களுக்கான ஒருங்கிணைந்ததன்மையை அங்கீகரிப்பதென்பது சாதாராண விஷயமில்லை. படத்தின் முடிவில், மிகவும் உருக்கமாகவும், உறுதியாகவும், “சர்வதேச ஐக்கியதிற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் உணர முடிகிறது” என்று மெலிசா கூறுகிறார்.
இப்போதிருக்கும் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் அரசியல் அதிகாரங்களால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் குறுகிய தேசிய கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு செல்ல, தொழிலாளர்கள் புறநிலைரீதியாக உந்தப்படுகிறார்கள் என்பதையே The Red Tail எடுத்துக்காட்டுகிறது. இதை ஆழமாகவும், மனிதத்தன்மையோடும், கையாளக்கூடிய வகையிலும் மெக்கெல்சன்-கோச் ஆவணப்படம் நிரூபித்திருக்கிறது.
ஆனால், அதேநேரத்தில், பதில்கள் பலவற்றை அளிப்பதற்கு பதிலாக படம் பல கேள்விகளை எழுப்புகிறது. அதற்காக ஒருபோதும் அது ஒரு விமர்சனம் கூட இல்லை. கேள்விகளை எழுப்புவது எல்லாவகையிலும் நல்லது தான். ஆனால், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், திரைப்பட தயாரிப்பாளர்களும் சில தீர்மானங்களை, கடுமையான தீர்மானங்களையும் கூட, எட்டியே ஆக வேண்டியுள்ளது. இப்போதைய நிலைமையில் இது பெரும்பாலான கலைஞர்களுக்கு மிகவும் சவாலானதாக உள்ளது.
தொழிற்சங்கங்களைப் பற்றி இன்றும் நிலவும் குழப்பங்களும் (பெரும்பாலும் சில விஷயங்களில் இது நீண்டகாலமாக இருந்து வருகிறது) பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. கலைத்துறையில், தொழிலாள வர்க்க வாழ்க்கையுடன் குறைந்த அனுபவமுள்ள, ஆனால் நல்ல நோக்கமுடைய சிலர், தொழிலாள வர்க்கத்துடனும், தொழிலாள வர்க்க போராட்டத்துடனும் தொழிற்சங்கங்களை அடையாளம் காண்கிறார்கள். இதில் தவறுள்ளது, அமெரிக்க வாழ்க்கையைக் குறித்து மிகவும் ஆழமான உண்மைகளை எடுத்துக்காட்டி, இதைக் கடந்து வரவேண்டிய அவசியமுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்களும், கோச் குடும்பத்தினரும் சர்வதேச உழைக்கும் மக்களின் சக்தியையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த சூத்திரத்தின் அடுத்தப்பக்கத்தை பார்ப்பதும் அவசியமாகும்: அதாவது, எங்குமிருக்கும் ஆளும் மேற்தட்டுக்கள், தேசிய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றிற்கு வக்காலத்துவாங்குபவர்களின் நலன்களுக்காக, தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கு எதிராக நிறுவனங்கள் மிகவும் நனவுபூர்வமாக செயல்படுகின்றன. AFL-CIO சீனாவின் அரச தொழிற்சங்கங்களைப்போல் அதனது அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற உண்மையை ஒருவர் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. அமெரிக்க சங்கங்கள் அதிகாரத்துவ கூண்டுகள், அதில் தாங்கள் மாட்டிக்கொண்டிருப்பதாக தொழிலாளர்கள் காண்கிறார்கள்.
சுவாரசியமான வகையில், ஜூன் 2007இல் சார்ளி ரோஸ் அளித்த நேர்காணலின் ஒரு துண்டுகாட்சியையும் திரைப்பட இயக்குனர்கள் இதில் சேர்த்திருக்கிறார்கள். அதில் “சர்வதேச சங்கங்களின்” தேவை குறித்து “Change to Win” சங்க தலைவர் ஆண்டி ஸ்டெர்ன் பேசுகிறார். அதில் அவர் சீனாவிலுள்ள வால்-மார்ட் தொழிலாளர்களை உத்தியோகபூர்வமாக ஒருங்கிணைக்க உதவியதில் தம்முடைய பங்களிப்பு குறித்து விவரிக்கிறார். (ஜூன் 2010, உயிரியியல்ரீதியான யுத்த பாதுகாப்பு தளவாடங்களில் நிபுணத்துவ பெற்ற ஒரு நிறுவனமான SIGAஇன் இயக்குனர் குழுவில் ஸ்டெர்ன் சேர்ந்தார் என்பதைக் குறிப்பிடுவது இங்கே மதிப்புடையதாக இருக்கும்) “சர்வதேச சங்கமாக்கம்” என்ற அவருடைய பாணி, AFL-CIOஇன் American Institute for Free Labor Development என்பதை நினைவிற்குக் கொண்டு வருகிறது. அமெரிக்க அரசாங்கத்துடன் தசாப்தங்களாக கொண்ட கூட்டணியின் காரணமாக, AIFLD ஆனது CIAஇன் “தொழிலாளர் முன்னணி” என்றும், அது வாஷிங்டனின் இலக்கிலிருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக “தொழிலாளர்” அதிருப்தியை தூண்டிவிடுவது, தீவிர சங்கங்களை இல்லாதொழிப்பது ஆகியவற்றிற்கு அர்பணிக்கப்பட்டது என்றும் சர்வதேச அளவில் அறியப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவேளை நோக்கமில்லாமலேயே, AMFA போன்ற “சுயாதீனமான” சங்கங்கள் AFO-CIOஇன் அதிகாரத்துவத்தைத் தவிர, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முன்னெடுக்கும் தகுதியை இழந்துவிட்டிருக்கின்றன என்ற பிளவையும் The Red Tail வெளிப்படுத்தி இருக்கிறது. ஆழமான காட்டிக்கொடுப்புகள் இல்லாமலும், நேர்மையாக இருந்த போதினும், AMFA தலைமையிடம் அரசியல் மற்றும் சமூக முன்னோக்கு இல்லாத காரணத்தால், அது நோர்த்வெஸ்ட் போராட்டத்தை ஒரு குறுகிய வட்டத்திலேயே பார்த்தது. சலுகைகள் மற்றும் வெளியேற்றங்களுக்கு எதிராக மக்களின் பரந்த அடுக்குகளை நோக்கி போராட்டத்தைத் திருப்புவது குறித்தும் அது ஒருபோதும் கவனத்தில் எடுக்கவில்லை.
ஒரு புள்ளியில், The Red Tailஇல், “நாம் வெற்றியடைய முடியாது என்றாலும் கூட, நாம் தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகும்” என்று AMFA Local 33இன் Ted Ludwig கூறுகிறார். இந்த வீராவேசமான வார்த்தைகள், தவிர்க்க முடியாமல் இழப்புகளைக் கொண்டு வந்ததுடன், மோசமானவொன்றாகும். சர்வதேச தொழிலாள வர்க்கம் பிரமாண்டமான சக்திமிக்கது. நிச்சயமாக “வெற்றியை” எட்ட முடியும். ஆனால் அதை செய்ய, அது அதன் சொந்த சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் நலன்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
மின்னிசோடாவின் ஜனநாயக கட்சியான ஜனநாயக விவசாய தொழிற்கட்சியின் (Democratic-Farmer-Labor Party) சார்பில் காங்கிரஸில் இடம் பெற்றுள்ள ஜிம் ஒபெர்ஸ்டார் மற்றும் கல்வியாளர் பீட்டர் ரேச்லெஃப் போன்ற தலைவர்கள் படத்தின் காட்சிகளில் பேசும் போது, வழக்கமான அறிவிப்புகளையே வழங்குகிறார்கள். வேலைகள் மற்றும் சம்பளங்களுக்கு எதிராக பெருநிறுவன-அரசியல் தாக்குதலுக்கு ஒரு மாற்றீட்டை அவர்களால் வழங்க முடியவில்லை.
நம்முடைய காலத்தில் நிலவும் அனைத்து சிக்கலான அரசியல் பிரச்சினைகளையும் கையாள்வது திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலையில்லை, ஆனால் இதை அவர்கள் கையாளப்போகிறார்கள் என்றால், அவர்கள் வெளிப்படையாக ஓர் உயர்ந்த தரத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகளவில் வரையறைகள் இருப்பதாக ஒருவர் உணரும் பெரிய பிரச்சினைகளை, அவர்கள் அளவிற்கு, மெக்கல்சனும், கோச்சும் எழுப்பி இருக்கிறார்கள். ஏதோவொரு முக்கியமானதை நோக்கி பணியாற்றுபவர்களிடமிருந்து இது தான் எதிர்பார்க்கப்படுகிறது; இந்த படத்தைப் பொறுத்த வரையில், நவீன பொருளாதார வாழ்க்கையின் நிலைமைகளால் உருவாக்கப்பட்ட அசாதாரண மனித நாடகமொன்று இரசிகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிடத்தக்க தொழிலாளர் குறிப்பிடத்தக்க அனுபவங்களுக்குள் கடந்து செல்வதை The Red Tail நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
0 comments :
Post a Comment