Thursday, August 5, 2010

தமிழ் மொழி பரவலாக பேசப்படும் இடங்களில் சிங்கள மொழி பேசும் நீதிபதிகள். JVP

வடகிழக்கில் தமிழ் மொழி பேசப்படும் இடங்களில் அரசாங்கம் சிங்கள மொழிபேசும் நீதிபதிகளை நியமித்துள்ளமையை பாராளுமன்றின் கவனத்திற்கு ஜேவிபி எம்பி அனுர குமார திஸாநாயக்க கொண்டுவந்துள்ளார். நீதிமன்ற திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வவுனியா உயர் நீதிமன்றத்தில் சிங்களவர் ஒருவர் நீதவானாக கடமையாற்றி வருவதாகவும், நீதவானின் திறமை பற்றி எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிங்களவர் ஒருவரே நீதவானக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதே சாலச் சிறந்ததென குறிப்பிட்ட அவர் வடக்கு கிழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினாலேயே சர்வதேச ரீதியில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

அத்துடன் வீட்டில் பணியாற்றிய பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த நீதவானுக்கு எதிராக இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் குமரன் பத்மநாதன் குறித்து பலரும் பலவிதமாக தகவல்களை வெளியிட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசாங்கம் மக்களுக்கு இது குறித்து தெளிவான சட்ட முடிவினை கூறவேண்டும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க பாரளுமன்ற உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com