Monday, August 30, 2010

அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) - புன்னியாமீன்

அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. ‘காணாமற்போனோர்’ என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய .பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.

காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம், அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது. இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித்தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற்போனோர் இடம் பெற்றதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. அடிமைத்துவ யுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற்போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல்நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் சுவிடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் என்பவர் காணாமல்போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார்.20ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஓல் வொலண்பேக் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமற்போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஓல் வொலண்பேக் இன்று வரை போற்றப்படுகிறார். 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஓல் வொலண்பேக் ரஸ்யப்படையினால் கைது செய்யப்பட்டார்.இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது. காணாமற்போனோர் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரங்களில் ரஓல் வொலண்பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.

காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ, மாஃபியா குழுக்கலாலோ, ஆயுதக்குழுக்களினாலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில் உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான “மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு” மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன. “அனைத்துலக காணாமற்போனோர் நாள்” இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

அண்மைக்காலத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ, அல் காயிதா பயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள்.என்று கூறப்படுகிறது.இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைபபலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொணடனர். இதனூடாகவும் காணாமட் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது.அதே நேரம அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத்தில் கூட பல்வேறு பட்ட வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இயற்கைகாரணிகளாலும் காணாமல் போவது இடம் பெறுகின்றது. உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமல் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக்கூறப்படுகிறது.

கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர்பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத்திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள் , இளம் பெண்களை கடத்தல், பழிவாங்கும் நோக்கத்தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல் உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்…. இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.

‘அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ, பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்.” என்று முன்னால் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும். ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக்கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடைமுறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொண்டாடி வருகிறது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், மனித குலத்திலேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது. என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில், அரசுகள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன்.என்றும் அவ்வறிக்கையில் மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் - சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள், தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர்கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் - இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன; அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னால் செயலாளர் கொண்டலீசா ரைஸ், ‘ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்” .என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வேதச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார். நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் “புரோக்கர்’களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது. இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர்.

2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.

சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே எவ்வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அந்த அறிக்கை உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், பாலியல் தொழிலுக்கான தேவையே, ஆள் கடத்தலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது. வேலைக்காக ஆட்களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி, ஊமைகளாய்த் தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது. அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக்கைக்கும் உரியது. மனிதநேயமற்ற, கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

காணாமற்போனோர் பற்றி எடுத்துப் கொள்கையில் காணாமற்போனவர் ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தை மீறி காணாமற்போனோர் இடம் பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment