இலங்கையின் நியாயமின்மையை யு.எஸ். அறிக்கை எடுத்துக்காட்டுகிறது: Human Right watch
மனித உரிமைகள் மற்றும் யுத்த குற்றம் விடயத்தில் இலங்கை அரசாங்கம் போதிய அளவு விசாரணை நடத்தவில்லை என்பதை, இலங்கை குறித்த அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துளளது.
அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றம் தொடர்பாக போதுமான தகவல்களை தரவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உண்மையில் சர்வதேச ரீதியான யுத்தகுற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதே யதார்த்தமான நடவடிக்கையாக அமையும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாக, அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் நேற்றைய தினம் 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான வருடாந்த அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்த பின்னரும், குறிப்பிடத்தக்க அளவு இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கி செயற்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசாங்கத்தினால் உண்மை கண்டறியும் குழு அல்லது மாண்புமிக்கோர் குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதும், அந்தக்குழு மிகவும் தாமதமாக தற்போதே தமது பணிகளை மேற்கொண்டுள்ளது குறித்தும் அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் குறைகூறியுள்ளது.
அத்துடன் மாண்பு மிக்கோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பாகவும் அதில் கண்டனம் தெரிவிகப்பட்டுள்ளது.
அந்த குழுவின் தலைவர் சீ ஆர். டி சில்வா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை அதில் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சகம்,இவ்வாறான நிலையில் அந்த குழு எவ்வாறு சுயாதீனமாக இயங்கும் எனவும், அதன் அறிக்கை எந்த அளவு நம்பகத்தன்மை வாய்ந்தாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட நிபுணர்கள் குழு தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிபுணர்கள் குழுவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கிய போதும், இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது தொடர்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்று வருகின்ற மனிதஉரிமை மீறல் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமது பார்வைகளை செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment