இந்திய தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முக்கிய அதிகாரிகள் இருவர்,யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு இலங்கை இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பு யாழ்ப்பாண செயலகத்தில் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் யாழ்ப்பாண ஆட்சித்தலைவர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் பங்கேற்றார்கள். இந்த அதிகாரிகளின் விஜயம் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கப்படாததோடு, கூட்டத்தில் பங்கேற்று செய்திகள் சேகரிக்கவும் உள்ளூர் பத்திரிகைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் நடந்துவரும் மீள்குடியேற்றம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்தே இந்திய அதிகாரிகள் விவாதித்ததாக அக்கூட்டத்தில் பங்கெடுத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தமக்குத் திருப்தி அளிப்பதாகவும் அவ்வதிகாரிகள் கூறியுள்ளனராம்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்து பொதுமக்களுடன் உரையாடி இப்போதுள்ள பாதுகாப்பு நிலைவரத்தைக அவர்கள் கேட்டறிந்தனர். போருக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களை மிக விவரமாகத் தாம் சந்தித்த பொதுமக்களிடம் இருந்து அறிந்து சென்றுள்ளனர்.
வட பகுதியின் நிலவரம் மற்றும் மீள்குடியேற்றம் குறித்த ஆய்வுக்கு இந்திய தூதர் ஒருவரை அனுப்பப்போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், இந்திய அதிகாரிகளின் இந்த திடீர், இரகசிய விஜயம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
0 comments :
Post a Comment