கண்ணிவெடி அகற்றும் பணியை தொடர இந்தியா இணக்கம்.
இலங்கையின் வடபகுதியில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றுவதற்கான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெறுமதியின் படி 410 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படுகிறது என்பதனை கடிதம் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பீ. ஜயசுந்தரவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா அறிவித்துள்ளார்.
இலங்கையில் பல ஆண்டு காலம் சேவை புரியும் ஹொரைசன் மற்றும் சர்வத்ரா நிறுவனங்களின் ஏழு இந்திய கண்ணிவெடி, மிதிவெடி அகற்றும் முகவர்களின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கு இந்திய அரசு இணங்கியுள்ளது என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தோரின் மீள் குடியேற்றத்திற்கான பங்களிப்புடன் வட பகுதி ரயில் பாதை புனரமைப்புக்குத் தேவையான மிதி வெடி, கண்ணிவெடி அகற்றல் பணிகளிலும் இக்குழுவினர் ஈடுபடவுள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் மீள் கட்டுமான மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதிலான இந்திய அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பை இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மீண்டும் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment