ஜம்மு காஷ்மீருக்குத் தன்னாட்சி: மன்மோகன்
கருத்து ஒற்றுமை ஏற்பட்டால் காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி பரிசீலிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க புதிய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் திரு சிங் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் வன்செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வரும் வேளையில் பிரதமரின் இந்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கலவரம் நடக்கிறது. அந்த ஆர்ப்பாட்டாங்கள் கலவரங்களாக மாறி, பலர் மாண்டுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பேராளர்களின் கூட்டத்தை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அதில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பி.டி.பி. எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
“காஷ்மீர் தெருக்களில் கோபத்துடனும் வெறுப்புடனும் காணப்படும் இளைஞர்களின் வலியையும் கோபத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று மன்மோகன் சிங் சொன்னார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு காஷ்மீர் இளைஞர்கள் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்த பிரதமர், இளைஞர்கள் படிக்காவிட்டால் காஷ்மீரின் எதிர்காலம் என்னவாகும் என்று பெற்றோருக்கு கேள்வி எழுப்பினார்.
அனைவரும் இணைந்து ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.
காஷ்மீர் மக்களின் கௌவரத்தைக் காப்பாற்றும் வகையில் இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.
மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் ரீதியாக கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது பற்றி அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.
0 comments :
Post a Comment