ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பான இராணுவ குற்றவியல் நீதிமன்றின் விசாரணை அறிக்கையினை பாராளுமன்றுக்கு சமர்பிக்குமாறும் அது தொடர்பான விவாதம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் கோரிக்ககை விடுத்துள்ளார்.
அத்துடன் ஜெனரல் பொன்சேகா சேவையில் இருந்தவண்ணம் அரசியலில் ஈடுபட்டதாக அவருக்கு இராணுவ குற்றவியல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்பானது அவரது ஜனநாயக மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவரின் இவ்வேண்டுதலுக்கு அரச தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதுடன் சுமார் 20 நிமிடங்களுக்கு பாரளுமன்று அதிரும்வண்ணம் ஆழும் கட்சியினர் கூக்குரலிட்டுள்ளனர்.
மேலும், எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு பதிலளித்த பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இராணுவ குற்றவியல் நீதிமன்றானது இலங்கையின் சட்டதுறைக்கு உட்பட்டது எனவும் அவ்நீதிமன்றின் தீர்ப்பினை பாராளுமன்றில் விவாதிப்பது பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பீடாதிபதிகளை ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா சந்தித்து ஜெனரல் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக எடுத்துக்கூறியபோது பீடாதிபதிகள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேற்படி குற்றச்சாட்டில் ஜெனரல் பொன்சேகா குற்றமிழைத்திருந்தால்கூட ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்கவேண்டும் எனவும் ஜெனரல் பொன்சேகா போன்ற திறமையானதோர் இராணுவத்தளபதியின் வழிநடத்தலில்லாது இந்நாட்டினை பீடித்திருந்த பயங்கரவாதத்தினை அழித்திருக்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சரத் பொன்சேகாவின் பெயருக்கு முன்னால் ஜெனரல் என்ற அடை மெழியைப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். பொன்சேகாவின் இராணுவ பதக்கங்கள் மற்றும் நட்சத்திரங்களை பறிக்குமாறு அளித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, பொன்சேகாவை இனி வரும் காலங்களில் ஜெனரல் என அழைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ சேவைக்கு களங்கம் ஏற்படுத்திய நபரை இராணுவ ரீதியான அடைமொழிகளைக் கொண்டு அழைப்பது நியாயமற்றதென அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆவணத்திலோ அல்லது ஊடகங்களிலோ சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment