Saturday, August 7, 2010

அரசு – ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தைகள் நிறுத்தம். சாடுகின்றார் ரவி கருணாநாயக்க.

அரசியல் யாப்பு மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி முன்னமொழிந்த விடயங்கள் பலவற்றை அரசாங்கம் நிராகரித்து விட்டாக தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கு தொடர்ந்து பேசுவதில் எந்த பலனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் கட்டம் கட்டமாக பேச்சுக்களை நடத்தி வந்தது. ஆனால் எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்களை ஆளுங்கட்சிப் பக்கம் இழுப்பதற்காக இப்பேச்சுக்களை அரசாங்கம் பயன்படுத்துவதாகக் கூறுகின்ற எதிர்க்கட்சி, இனி இப்பேச்சுக்களை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி மகிந்த் ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளபோதும், அப்பேச்சுக்கள் இனித் தொடராது என ஐ.தே.க வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்தப் பேச்சுக்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தியே எதிர்க்கட்சி உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரை அரசாங்கம் தனது பக்கம் இழுத்துவிட்டதாக ஐ.தே.க குற்றம் கூறுகிறது.

பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் பெறுவதற்கு இன்னமும் 4 உறுப்பினர்கள் மட்டுமே தேவையாகவுள்ள நிலையில், இன்னும் சிலரைத் தம்பக்கம் சாய்ப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.

No comments:

Post a Comment