Tuesday, August 3, 2010

விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்.

2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் ஒருவரின் செயலாளரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும அவரது குடும்பத்தினருடன் பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இன்று 1.30 மணிக்கு பாராளுமன்று ஒன்று கூடுவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை தனது குடும்பத்தினருடன் ஆரம்பித்த பாராளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் , நான் அரசியல் பழிவாங்கலுக்காக 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். சிறைச்சாலை நிர்வாகம் , சட்ட மா அதிபர் திணைக்களம் , அரச பகுப்பாய்வு திணைக்களம் யாவுமே ஒரு கட்சியின் உப அலுவலகங்களாக செயற்படுகின்றன. நீதியானதும் நேர்மையானதுமான செயற்பாடுகள் எதுவும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினரான என்மீது பலத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. களுத்துறை சிறைச்சாலை சித்திரவதை கூடமாக மாறிவருகின்றது. சிறைச்சாலைகள் ஆணையாளர் என்னை மிரட்டுகின்றார் என அரசின் மீது பலத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அதேநேரம் இவர் சிறைச்சாலை விதிகளை மீறியதாக சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கு சிறைச்சாலை நீதிமன்றில் விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கம் இடையே மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தைகளின் போது தம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரை விடுவித்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசுடன் பேசியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment