கே.பி யின் தலைமையில் இராணுவத் தொண்டைர் படையணி.
புலிகளியக்கத்திற்கான ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டுவந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளது. இறுதி யுத்தத்திற்கு முன்னர் மற்றும் பின்னர் படையினரிடம் சரணடைந்துள்ள முன்னாள் புலிகளை கொண்டே இப்படைப்பிரிவு உருவாக்கப்படவுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படைப்பிரிவின் தளபதியாக கே.பி நியமிக்கப்படவுள்ளதாகவும் , அதன்பொருட்டு கே.பி க்கு கேணல் நிலை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அரசாங்கத்தின் இந்நகர்வுக்கு படைத்தரப்பிலுள்ள அதிகாரிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக லங்காஈநியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது. அதேநேரம் கே.பி தான் பிரிகேடியராக நியமிக்கப்படுவதை விரும்புவதாகவும் , அது தொடர்பாக அவருடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
எது எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் லெப.கேணல் பதவிவரையே நேரடியாக இணையமுடியும். ஏதாவது ஓர் துறையில் (பொறியில் , மருத்துவம் , கணக்கியல்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் பட்டத்துடன் 10வருட சேவை அனுபவத்துடன் இவ்வாறு இணையமுடியும். ஆனால் கே.பி எந்ததுறையில் பட்டம் பெற்றார் என்பது இதுவரை வெளிவரவில்லை. போதைப்பொருள் , மற்றும் ஆயுதக்கட்தலில் தாய்லாந்து பல்கலைக்கழங்களில் எதாவது பட்டம் (Master of smuggling) பெற்றுள்ளாரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லை.
கடந்தகாலங்களில் ஆயுதக்குழுக்கள் யாவுமே தமிழ் மக்களை தமது வன்முறைக்கலாச்சாரத்தினுள் அடக்கி வைத்திருந்ததை எவரும் மறுக்கமுடியாது. புலிகளின் தலைமை முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் சகல ஆயுதக்குழுக்களும் ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள நிலையில் அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஆயுதக்குழுக்களின் அடிமைகளாக அடக்கிவைப்பதற்காக மேற்கொள்ளும் ஓர் முயற்சியாகவே கே.பி தலைமையிலான இராணுவ தொண்டர்படை நோக்கப்படுகின்றது. இவ்வாறானதோர் ஆயுதக்குழுவினை உருவாக்குவதன்மூலம் அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களிடையே பிளவுகளை வலுப்படுத்தி தொடர்ந்து தமிழ் மக்கள் மீது பயங்கரவாத முலாம்பூசி வைத்திருக்கலாம் எனக் கருதுகின்றது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களுடாக கே.பி ஓர் இராணுவ அதிகாரியாக நியமனம் பெற்றால் இலங்கை இராணுவம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட , தகுதியுடைய , தனக்கென ஓர் சட்டதிட்டங்களை கொண்டுள்ள இராணுவம் என்ற நிலை அழிந்து பிரபாகரன் தலைமையிலான புலி இராணுவத்திற்கு சமப்படுத்தப்படும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. பிரபாகரன் ஒர் இராணுவக் கட்டமைப்பினை நிறுவி எவ்வித கட்டுப்பாடுகள் , சட்டதிட்டங்கள் இல்லாமல் வீரவேங்கை எனதொடங்கி பிரிகேடியர் வரை பதவிநிலைகளை வழங்கி வந்தார். அங்கு ஆட்சேர்ப்புக்கான எந்த நியதிகளும் இருக்கவில்லை. நிலைகளுக்கான அடிப்படை கல்வித்தகைமை வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. இவ் பதவிநிலைகள் யாவும் மரணத்தின் பின்னர் வழங்கப்பட்டுவந்தபோதும் , சில முன்னணி தலைவர்களுக்கு உயிருடனே பதவிகளை வழங்கியிருந்தார். கேணல் கருணா , கேணல் சொர்ணம் , கேணல் பாணு , கேணல் துர்கா , கேணல் விதுஷா , கேணல் தீபன் , கேணல் பதுமன் போன்றோருடன் இன்னும் பலருக்கு உயிருடன் பதவிகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பிரபாகரனிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியாதுபோன இராணுவப் பதவி ஒன்றினை கே.பி இன்று மகிந்த ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்வாரா?
அத்துடன் கே.பி தலைமையில் இவ்வாறானதோர் தொண்டர் படையணி உருவாகுமானல் இலங்கையின் வடகிழக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும். இத்தொண்டர் படையணியில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள முன்னாள் பயங்கரவாதிகளான புலிகள் தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்துவர். மாற்றுக்கருத்தாளர்கள் தொடர்ந்தும் கொன்றொழிக்கப்படுவர். புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய பலர் இன்று இலங்கை சென்று வருகின்றனர். இவ்வாறானோர் மீண்டும் இலங்கையை மறக்கநேரிடும். மாற்று தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாட்டுக்கு தடை ஏற்படுத்தப்பட்டு ஏதோ ஒருவடிவில் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் தலைதூக்கும்.
0 comments :
Post a Comment