Friday, August 27, 2010

பார்வையிழந்தோருக்கு புது நம்பிக்கை-செயற்கை கார்னியா கண்டுபிடிப்பு


பார்வையற்றோருக்கு புது நம்பிக்கையூட்டும் வகையில், புதிய செயற்கை கார்னியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஸ்வீடன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கண் பார்வைக்கு மிக முக்கியமானது கார்னியா எனப்படும் கருவிழி. அது பாதிக்கப்பட்டால் பார்வை பறிபோகும்.

இந்த நிலையில் இந்த கார்னியாவை செயற்கையாக உருவாக்கி மூன்று நாட்டு விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்து, பார்வையற்றோருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான ஒட்டாவா மருத்துவமனை ஆய்வுக் கழக டாக்டர் கிரிபித் கூறுகையில், செயற்கை கல்லோஜனை பயன்படுத்தி இந்த செயற்கை கார்னியாவை உருவாக்கியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செயற்கை கார்னியாவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்து ஆய்வு செய்தோம். அதில் ஆய்வுக்குட்பட்டோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்த செயற்கை கார்னியாவை கண்ணில் பொருத்துவதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதியில் செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு பார்வை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இந்த செயற்கை கார்னியா பொருத்தப்படுகிறது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com