கே.பி என்றொரு சந்தேக நபர் எம்மிடம் இல்லை. டியு குணசேகர பாராளுமன்றில் வாதம்.
குமரன் பத்தநாதன் என்றொரு பயங்கரவாத சந்தேக நபர் தம்மிடமில்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர இன்று பாராளுன்றில் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதியான கே.பி.யை அரசு விடுவிப்பதாகவிருந்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் புலிப் போராளிகளையும் விடுவிக்க வேண்டும். சட்டம் ஒரே முறையில் தான் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐ.தே.க. எம்.பி.தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தபோதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐ.தே.க பா.உ தயாசிறி ஜயசேகர தொடர்ந்து பேசுகையில் சர்வதேச பயங்கரவாதியான கே.பி. இன்று அரசின் அரவணைப்பில் சொகுசு அறைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றார். வடக்கிற்கு சுற்றுலா செல்கின்றார். வவுனியாவிலுள்ள வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்து பணம் சேகரிக்கத் தொடங்கியுள்ளார். கே .பி. கைதான போது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்த அமைச்சர்கள், ஊடகங்கள் எல்லாம் இன்று கே.பி.புகழ்பாடுகின்றன என்றார்.
மேலும் இந்நாட்டின் பொலிஸ் மா அதிபர் சிறைக் கைதியாகவேயுள்ளார். சட்டங்கள் மீறப்படும் போது அவரால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. சியத்த, வெற்றி எப்.எம்.மீதான தாக்குதல் நடந்த பின்னர் ஏன் ஊடகத்துறை அமைச்சர் அங்குபோய் நிலைமைகளைப் பார்வையிடவில்லை?
ஐ.தே.க பா.உ தயாசிறியின் பேச்சுக்கு பதிலளித்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பத்மநாதன் என்ற பெயரில் அதிகமானோர் உள்ளர். அவசியம் ஏற்பட்டால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 8780 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்,அவர்களில் 706 பேர் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள், 8074 பேர் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறார்கள் என்றார்.
0 comments :
Post a Comment