கருணாநிதி என்றால் ஊழல்வாதிதான்: விஜயகாந்த்
காமராஜர் என்றால் கல்விக் கண் திறந்தவர், எம்.ஜி.ஆர் என்றால் வள்ளல் என்ற அடையாளம் மக்களிடம் உள்ளது. ஆனால், கருணாநிதி என்றால் ஊழல்வாதி என்ற அடையாளமே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதியை வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்குவதாக விஜயகாந்த் மீது முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கதாநாயனாக நடித்து நான் வாங்குகிற சம்பளத்தில் பெரும்பகுதியை வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்குவதாக முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார். அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், நேரடியாக கூறாமல் "கூறப்படுகிறது'' என்று சொல்லி தப்பித்துக் கொள்வது ஏன்?
இவர் இப்படி கூறுவது முதல் முறையல்ல. எம்.ஜி.ஆர். மீதும் இதே குற்றச்சாற்றை தான் கூறினார். வேறு எந்தக் குற்றம், குறையும் காண முடியாததால் உளுத்துப்போன குற்றச்சாற்றை கூறி வருகிறார்.
முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் வாரத்துக்கு ஒரு திரைப்படம் எடுக்கின்றனரே, அது என்ன வெள்ளைப் பணமா? இரவு பகல் பாராமல் உழைப்பதில் வரி கட்டியதுபோக மீதிப் பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வரும் என்னைக் குறை கூறும் முதலமைச்சர், அவரது குடும்பத்தினர் உலக பணக்காரர்கள் வரிசையில் போட்டியிடும் அளவுக்கு செல்வம் வந்தது எப்படி என்பதை விளக்குவாரா? கதை வசனம் எழுதுபவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் ஆனதில்லை.
60 ஆண்டு பொதுவாழ்வில் 55 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திடீரென தர்மம் செய்ய வேண்டும் என்கிற ஞானோதயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சொந்தப் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளாரா? என்று நான் கேட்ட பிறகுதான் நன்கொடை பட்டியலை அவர் வெளியிட்டார். எத்தனையோ பட்டங்களை வாரி வழங்கும் தி.மு.க.வினர் கூட கருணாநிதியை வள்ளல் என்று அழைப்பதில்லை. அப்படி அழைப்பதற்கு அவர்களின் மனசாட்சி இடம் தரவில்லை.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்பட வேண்டும். வருமானத்தை ஈட்டுவது முக்கியமல்ல. அதனை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். என்னைப் பொறுத்தவரை, சம்பாதிப்பதில் பெரும் பகுதியை ஏழைகளின் வயிற்றில்தான் வைக்கிறேனே தவிர, இரும்புப் பெட்டியில் அல்ல. ஆனால், மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து, ஊழல் செய்தவர்கள் ஏழைகளுக்கு என்ன செய்துள்ளனர்?
தனக்கு பிறகும், தனது மனைவிக்கு பிறகும் வீட்டை தானமாக வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இன்று பசிக்கிறதே என்பவனுக்கு 8 நாள்கள் கழித்தா சோறு போடுவது? மாமண்டூரில் நான் கட்டிய திருமண மண்டபத்தை, திறப்பு விழா அன்றே மக்களிடம் ஒப்படைத்து விட்டேன். அதுதான் உண்மையான தானம். நான் செய்துள்ள உதவிகளை பட்டியலிட்டால் எந்தப் பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.
காமராஜர் என்றால் கல்விக் கண் திறந்தவர்; எம்.ஜி.ஆர் என்றால் வள்ளல் என்ற அடையாளம் மக்களிடம் உள்ளது. ஆனால், கருணாநிதி என்றால் ஊழல்வாதி என்ற அடையாளமே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியாவே, கருணாநிதியை விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி என்று கூறியுள்ளார்.
கருணாநிதி ஆட்சியில் தமிழகம் ஊழல் மயமாகி இருக்கிறது. அரசுத் துறையில் எங்கும் லஞ்சம் தாண்டவமாடுகிறது. தேர்தல் என்றாலே லஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார். என் முகத்தை நான் பார்ப்பது முக்கியமல்ல. நாட்டு மக்கள் பார்க்கிறார்களா என்பதே முக்கியம்.
உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆணவமும், ஆத்திரமும் கொண்டு ஏசுகிறார்கள் என்றால் அது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைக் காட்டுகிறது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment