Wednesday, August 4, 2010

கண்ணாடியால் ஆன விமானம் -ஏர் பஸ் திட்டம்!

பான்பரோ: எதிர்காலத்தில் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏர்பஸ் நிறுவனம் முன் வைத்துள்ள ஒரு மாடல் (Airbus Concept Plane) பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பான்பரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்த மாதிரி விமானம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

தாவர நார்களால் ஆன இதன் இருக்கைகள் உட்காரும் நபரின் உருவத்துக்கேற்ப வடிவம் மாறுமாம். விமானத்தின் மேல் பகுதி உள்பட அதன் பெரும்பாலான பகுதிகள் கண்ணாடியிழையினால் ஆனதாக இருக்கும். இதனால் விமானத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் முழு அளவில் வெளியுலகைப் பார்த்தவாரே பயணிக்கலாம்.

பயணிகளின் உடல் வெப்பத்தை வீணாக்காமல் அதைப் பயன்படுத்தி விமானத்தின் உள் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டதாகவும் இந்த விமானம் இருக்கும் என்கிறது ஏர்பஸ். வழக்கத்தைவிட அதிக நீளம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் சிறியதாகவே இருக்கும். இந்த இறக்கைகளில் என்ஜின்கள் புதைத்திருக்கும். U வடிவத்திலான இதன் வால் பகுதியால் விமானம் குறைந்த விட்டத்திலேயே திரும்ப முடியும்.

மேலும் 'ஹோலோகிராம்' மூலமான அலங்காரங்கள், ஸென் தோட்டம் என இந்த விமானம் நம்மை புதிய உலகுக்கே இட்டுச் செல்லும் என்கிறது ஏர் பஸ். இந்த விமானம் 2030ம் ஆண்டில் புழக்கத்துக்கு வரலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விமானக் கண்காட்சியையொட்டி இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள 'எதிர்கால விமானங்கள்' என்ற ஆவணத்தி்ல் மேலும் பல ஆச்சரியமான சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன.

அதில் சில:

-எதிர்காலத்தில் பல சிறிய விமானங்கள் நாரைகள் போல சேர்ந்து இணையாகப் பறக்கலாம்.

-நீண்டதூரம் பயணிக்கும் விமானங்கள் வானிலேயே பெரிய விமானத்தில் தரையிறங்கி மீண்டும் பறக்கலாம்.

-காற்றில் உள்ள ஹைட்ரஜனையே எரிபொருளாக மாற்றிக் கொண்டு விமானங்கள் பறக்கலாம்.

-சொகுசு கப்பல்கள் (cruise ships) போல பொழுதைக் கழிக்க கோசினோக்கள் உள்ளிட்டவை அடங்கிய சொகுசு விமானங்கள் புழக்கத்துக்கு வரலாம் என்று போகிறது இந்த ஆவணம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com